Tuesday, October 04, 2005

என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)

என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)

எங்க ஊரில் கிரிக்கெட் விளையாடுவதை விட வெளியூரில் சென்று விளையாட இருக்கிறோம் என்றால் அதற்கு முந்தைய இரவில் தூக்கமே வராது, எப்போடா விடியும் என்று தோணும். ஒருவழியாக விடிந்தப் பின்பு அம்மாவிடம் கையை பிடித்து, காலைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி, முதல் ஆளாக பஜாரில் போய் நிற்பேன், ஒவ்வொருவராக வர வர சந்தோசம் கூடும். 10 கிலோமீட்டருக்குள் அமைந்த ஊர் என்றால் சைக்கிளில் செல்வோம் அல்லது பஸ் தான். ஒரு போட்டிக்கு குறைந்தது 20 பேர் செல்வோம், ஆனால் பஸ்ஸில் எடுப்பதோ 8 அல்லது 10 டிக்கெட் தான், கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று முன்பக்கம் வந்தால் டிக்கெட் எடுக்காதவங்க பின்பக்கம் போய் ஏறிக் கொள்வோம், பின்பக்கம் வந்தால் முன்பக்கம், தனியார் வண்டியில் ஏறுவது இல்லை காரணம், இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்களே!.

பஸ்ஸில் போகும் போது படபடக்கும், டிக்கெட் கூட பரவாயில்லை, நம்ம பசங்க வண்டியில் கையை, காலை வச்சிகிட்டு சும்ம வரணுமே. கிண்டல், பாட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக போய் வருவோம். வெற்றி, தோல்வி எல்லாம் எங்களை பாதிக்காது.

நாங்க வாராவாரம் கிரிக்கெட் விளையாட போவது பூச்சிக்காடு என்ற ஊர், சைக்கிளில் செல்வோம், அங்கே இருந்த குளத்தில் தான் கிரிக்கெட் விளையாடுவோம், நல்லா புல் முளைத்திருக்கும், அங்கே தான் நான் பாய்ந்து பாய்ந்து விழுந்து பந்தை தடுப்பேன், அடியே படாது. அங்கே மாதவன் என்ற அருமையான பேட்ஸ்மேன், டிவிசன் போட்டிகளில் விளையாடியவர், அவருக்கு என்னைக் கண்டாலே அலர்ஜி, அருமையாக விளையாடுவார், எங்க சீனியர்கள் பந்து வீசி முடித்தப் பின்பு 4வது பந்து வீச்சாளராக நான் வருவேன், அதற்குள் அவர் 40 அல்லது 50 ரன்கள் சேகரித்து விடுவார், நான் போட்ட முதல் ஓவரிலேயே அவுட் ஆகி விடுவார். ஒரு மாதிரியா என்னை பார்த்து விட்டு போவார். இதை ஒருவழியாக கண்டுபிடித்த என் அணித்தலைவர் ரவிகுமார் என்னை 5 அல்லது 6வது ஓவரிலேயே பந்து வீச அழைப்பார், நானும் வருவேன், மாதவன் விக்கெட்டை எடுப்பேன், மீண்டும் பீல்டிங்க் செய்ய போய் விடுவேன், ஏனென்றால் மத்தவங்க சாத்தி புடுவாங்க. இறுதிக்கட்டத்தில் பந்து வீச சந்தர்ப்பம் கிடைக்கும்.

பேட்டிங்க் எடுத்துக் கொண்டால் எனக்கு 5 அல்லது 6 வரிசையில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் 10 ஓவருக்குள்ளேயே பேட்டிங்க் செய்து விடுவேன், எங்க முன்னணி ஆட்டக்காரர்கள் வெகு விரைவில் அவுட் ஆகி விடுவாங்க, அப்புறம், நானும் மத்தவங்களும் டொக்கு போட்டு 25 அல்லது 30 ஓவர்கள் வரை நின்று ஆடி விடுவோம். எனக்கு கபில் மாதிர் பேயாட்டம் ஆட ஆசை, ஒரு பந்தை ஆசைப்பட்டு ஓங்கி அடித்து அது 4 போனாலும், அங்கே கேப்டன் ஏதாவது சொல்லி திட்டுவார், மொவனோ அவுட் ஆகி மட்டும் வா, குளத்திலேயே முக்கி விடுவேன் என்பார், ஏதோ அவர் 50 அடித்த மாதிரி.

கொஞ்ச நாளில் பாஸ்கர் அண்ணா கேப்டன் ஆனார், அதன்பின்பு எனக்கு அணியில் தனி மரியாதை, அவர் என்னை வலதுகரம் போல் பாவித்தார். நல்ல ஆட்டக்காரர், நிறைய நுணுக்கங்களை பந்து வீச்சில் சொல்லிக் கொடுத்தார்.

அப்போ ஒரு நாள் ஜெயராஜ் அண்ணா, சுதாகர் அண்ணா, சார்லஸ் அண்ணா (சீனியர்) ஜோசப் அண்ணா எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது நாம ஏன் டோர்ணமெண்ட் நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம், உடனே எல்லோரும் சரி நடத்தலாம் என்றதும், கையில் ஒரு 50 பக்க நோட்டை எடுத்தாச்சு, மொத ஆளாக டாக்டர் மாமா தம்பிராஜை போய் பார்த்தோம், அவர்கள் ரொம்ப மகிழ்ச்சியாக 500 ரூபாய் முதல் பரிசாக கொடுப்பதாக சொன்னாங்க, அடுத்தது பஞ்சாயத்து தலைவர் பாண்டியன் 250 ரூபாய் இரண்டாவது பரிசு, அதிமுக செயலாளர் தொடர் ஆட்டக்காரர் விருதை கொடுத்து உதவினார்.

அப்புறம் பஜாரில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, 5, 10ம், திட்டும் வாங்கி ஒரு 200 ரூபாய் தேத்திட்டோம். உடனே அனைத்து ஊருக்கும் சொல்லி அனுப்பியாச்சி, அணியின் நுழைவுக்கட்டணம் 50 ரூபாய், மொத்தம் 8 அணிகள். நாக் அவுட் போட்டி என்று சொல்லியாச்சு.

டோர்ணமெண்ட் நடத்தும் அளவுக்கு மைதானம் ஊருக்கு வெளியே தேரியில் தான் இருந்தது, அங்கே போய் மாட்டு வண்டி வைத்து வண்ணாங்குளத்தில் களிமண் வெட்டி கொண்டு வந்து கொட்டி, ரோலர் போட்டு அருமையான மைதானம் உருவாக்கினோம். மைக் செட், தண்ணீர் பந்தல் என்று அருமையாக தயார் செய்தாச்சு.

எங்க ஊரு அணி, உடன்குடி, மெஞ்ஞானபுரம், பூச்சிக்காடு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி, நாசரேத் அணி, திருநெல்வேலி அணி இப்படியாக 8 அணிகள். நாங்க எளிதாக வெற்றிக் கொள்ளும் அணியை எங்களுக்கு எதிராகப் போட்டு செமி-பைனல் வந்தாச்சு, அதில் வெற்றிப் பெற்றால் குறைந்த பரிசான ரூபாய் 250 கிடைக்கும், பேட், கால்காப்பு எல்லாம் வாங்கலாமென்று திட்டம் போட்டிருந்தோம்.

முதல் ஆட்டத்தில் எங்க பெரியம்மா பையன் ஜெகன் அண்ணா அருமையாக ஆட மெஞ்ஞான புரம் அணியை வென்றோம். செமி பைனலில் திருநெல்வேலி அணி, அதில் ரமணி என்ற ஒரு ஆட்டக்காரர், மிக அற்புதமாக ஆடினார், நான் அவர் ஆட்டத்தை மிகவும் ரசித்தேன், எங்க அணியை போட்டு துவைத்து எடுத்திட்டார். 30 ஓவரில் 220 ரன்கள். ரமணி மட்டுமே 80 ரன்களுக்கு மேல், நல்ல வேளை நான் பந்து வீசும் முன்பே அவுட் ஆகிட்டார்.

அப்புறம் எங்க மக்கா, விளையாட போனால், நம்ம கங்குலி மாதிரி போன வேகம் தெரியாம வெளியே வந்து, சர்பத் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, ஏதோ 50 அடித்த களைப்பு மாதிரி. மேட்ச் பார்கக் வந்த பெரியவங்க எல்லாம் எங்க அணியின் முண்ணனி ஆட்டக்காரர்களான ஜெகன், சுதாகர், பாஸ்கர், ஆண்ட்ரூ, மெல்கி, மூர்த்தி எல்லோரையும் கன்னாபின்னா என்று திட்டத் தொடங்கிட்டாங்க. அப்புறமா நான் இறங்கும் போது ஒரு ரன் எடுத்தாலே அது நமக்கு பெருமை தான் என்று நினைத்தேன். நானும் சார்லஸீம் கட்டை போட்டு, திருநெல்வேலி அணியை கடுப்பேற்றி விட்டோம், 15 ஓவர்கள் வரை தாக்கு பிடித்தோம், அதில் நான் இரண்டு சிக்ஸர் தூக்கி விட, எங்க மக்களுக்கு ஒரே கொண்டாட்டம். செமி பைனலில் தோற்றதும், பைனலில் திருநெல்வேலி அணி வெற்றி பெற்று சுழல் கோப்பை தூக்கியது. ரமணி தொடர் நாயகன் பட்டம் வென்றார், அவரோடு கை குலுக்கியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருமுறை சாத்தான்குளத்தில் கிரிக்கெட் விளையாட என்னை உடன்குடி பள்ளி அணி சிறப்பு ஆட்டக்காரராக அழைத்தார்கள். நாங்களும் பக்கத்து ஊரில் நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்களை அழைத்துக் கொள்வோம். அப்படி சென்ற போது அந்த போட்டியானது 10 வரை படிக்கும் மாணவர்களுக்கானது, என்னைப் பார்த்ததும், என்னை விளையாட அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு கல்லூரி மாணவன் இப்போட்டியில் விளையாட முடியாது என்று சொல்ல, நாங்க நான் 9வது தான் படிக்கிறேன் என்று சொல்ல, அவர்கள் நம்பவில்லை.

அவர்களை எப்படி நம்ப வைத்தேன் தெரியுமா, ஒரு வாரத்திற்கு முன்பு தேர்வு எழுதிய கேள்வி, பதில்களை ஒன்று விடாமல் சொல்லி, நான் 9வது வகுப்பு தான் படிக்கிறேன் என்பதை நிறுபித்தேன். போட்டியில் நான் போட்ட முதல் பந்திலெயே விக்கெட் எகிற, மீண்டும் பிரச்சனை, ஒருவழியாக சமாளித்து வென்று, பரிசை வாங்கி வந்தோம். அவ்வாறு பரிசு வாங்கினால், ஹோட்டலில் பரோட்டாவும், சால்னாவும் வாங்கி கொடுப்பாங்க.

மாலை நேரங்களில் பள்ளியில் விளையாடும் போது, மாணவிகளை கவர சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, கிளின்போல்ட் ஆனது பலமுறை. தெருவில் விளளயாடும் போது வரவங்க போறவங்க மேலே அடிபட, பேட்டை தூக்கிப் போட்டு ஓடியதுண்டு, சில நேரங்களில் லாரியில் பந்து விழ, லாரி ஓட, நாங்க பந்தை எடுக்க சைக்கிளில் லாரியை விரட்டியதுண்டு. சில நேரம் மத்த அணியிடம் விளையாடும் போது அவர்களது பந்துக்களை சுட்டுக் கொண்டு வந்து விடுவோம்,அதற்கு என்று சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் உண்டு.

இப்படி தான் ஒரு முறை திருச்செந்தூர் ஹாஸ்டல் அணியுடன் கிரிக்கெட் போட்டி, எப்போவும் இல்லாமல் அன்றைக்கு பார்த்து சுதாகர் அண்ணா லுங்கி கட்டி வந்தார், அப்புறம் பேட்டிங்க் செய்ய போய் சரியான அடி வாங்கி, பெரிய மரம் சாய்ந்து விழுந்த மாதிரி கீழே விழுந்தார், அப்புறம் மீண்டும் லுங்கியை கட்டிக் கொண்டு நடகக் முடியாமல் நடந்து சீக்கிரம் மைதானத்தை விட்டு வெளியே போயிட்டார். மாலையில் அவர் வீட்டுக்கு போனால் புத்தம் புது எஸ்.எஸ் பேட், எப்போ அண்ணா வாங்கினீங்கன்னு கேட்டா, எப்படி சுட்டேன் என்று கேளுடா என்று சொன்னார், அப்புறம் தான் தெரியும் அது காலை போட்டியில் சுட்ட புது பேட், அதை தான் லுங்கியில் வைத்து மறைத்து கொண்டு வந்திருக்கிறார். இப்படி நிறைய கதைகள் உண்டு.

இதற்கிடையில் என்னுடைய கிரிக்கெட் வெறி அடங்காமல் போக, அடிக்கடி அடி பட்டு வர, அதைக் கண்ட அம்மா பயந்து, என்னை விளையாட விடமாட்டேன் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். நானும் என் அம்மாவிடம் நூலகம் செல்கிறேன், தேவகுமார் வீட்டிற்கு செல்கிறேன், ஸ்பெஷல் கிளாஸ் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, கிரிக்கெட் விளையாட போய் விடுவேன். நான் விளையாட போனது எப்படியாவது என் அம்மாவுக்கு தெரியவரும்.

தெருவில் போறவங்க சும்மா இருக்காம, என் பெயரைச் சொல்லி, அடிச்சான் பாரு ஒரு சிக்ஸர் சூப்பர் சிக்ஸர்பா, ஓடி போய் ஒரு கேட்ச் எடுத்தான் பாரு, அருமை என்று சொல்ல, என் அம்மாவோ என்னை ஆரத்தி எடுத்து வரவேற்க தயாராக இருப்பாங்க. 7வது வகுப்புக்கு மேல் அம்மா என்னை அடிப்பதை நிறுத்திட்டாங்க (எருமைமாடு மாதிரி சொரணை இல்லாதது ஒரு காரணம்). என் கிட்ட பேசவே மாட்டாங்க, அது எனக்கு பெரிய தண்டனையாக இருக்கும்.

அந்த நிலையில் 10வது படிக்கும் போது அம்மா என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டாங்க, இனிமேல் கிரிக்கெட் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என்று அவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்ய சொல்ல, நான் செய்த சத்தியத்தை 6 மாதங்களுக்கு மேல் கடை பிடித்தேன், என் சத்தியத்தை என் அம்மாவே வாபஸ் வாங்கிய கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.



(நினைவலைகள் ஓய்வதில்லை ….)

4 Comments:

At 6:52 AM, Blogger ENNAR said...

அந்த காலங்களில் சடு குடு அதான் கபாடி இப்போது கிரிக்கெட்

என்னார்

 
At 11:34 PM, Blogger பரஞ்சோதி said...

என்னார், சடுகுடு, கபாடி கதை எல்லாம் சொல்கிறேன்.

கிரிக்கெட் வந்தப் பின்பு நிறைய கிராமத்து விளையாட்டுகள் மறைந்து விட்டது என்பது கவலை தரும் செய்தி.

 
At 2:25 PM, Anonymous Anonymous said...

அவ்ளோ பெயர்களையும் நியாபகம் வைச்சிருக்கீங்களே பரஞ்சோதி.. உங்களுக்கு அதுக்கே தனி சுழல் கோப்பை தரலாம்.. :-))

 
At 10:48 PM, Blogger பரஞ்சோதி said...

நன்றி யாத்திரீகன் அவர்களே!

எங்க கிராமத்தில் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் தவிர்த்த விசயங்களிலும் ஒன்றாகவே இருப்போம். நண்பர்களாக மட்டுமல்லாது உறவினர்களாக இருப்பதும் ஒரு வகையில் நினைவில் வைக்க உதவுகிறது.

குறிப்பாக வாலிபால், கபாடி, கோயில் திருவிழா, கிறிஸ்துமஸ், வெட்டியாக குட்டி சுவரில் அமர்ந்து பேசுவது என்று அனைத்திலும் நாங்க இருப்பதால் அனைவரின் பெயரும், நினைவில் இருக்கிறது.

 

Post a Comment

<< Home