Sunday, October 02, 2005

என் நினைவலைகள் – கிரிக்கெட்

என் நினைவலைகள் – கிரிக்கெட்


கிரிக்கெட் என்னை உயர்த்தியது எவ்வளவோ அதை விட பல மடங்கு கீழே தள்ளியது, ஆனாலும் என்னால் கிரிக்கெட்டை விட முடியவில்லை, அது இரத்தத்தில் ஊறி போயிட்டுது.

Image hosted by Photobucket.com
6ம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என்று தெரியாது. முதன் முதலில் கிரிக்கெட்டைப் பற்றி மற்றவர் பேசக் கேட்டது எப்போ என்றால் நம்ம முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் அவர்கள், தான் அறிமுகம் ஆன முதல் மூன்று டெஸ்ட்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்தது தான்.

அப்போ எங்க பஜார் தெருவில் இருக்கும் மூர்த்தி என்ற ஒரு அண்ணன் (4 வயது மூத்தவர்) தினமலர் படித்து விட்டு “டேய், நேத்து நம்ம அசாருதீன் சென்சுரி அடித்தாண்டா” என்பார்” எனக்கு சென்சுரி, பிப்டி, ரன், விக்கெட், ரன் அவுட், இப்படி பல ஆங்கில/கிரிக்கெட் வார்த்தைகளை கற்றுக் கொடுத்த குரு அவர். தினமும் அவரை கேள்வி கேட்டு நோண்டுவேன், சில சமயம் மனுசன் வெறுத்து ஓடியே போய்விடுவார், திட்டியும் இருக்கிறார்.

Image hosted by Photobucket.com
அப்போ தான் இந்திய அணி இலங்கை சென்றது, எங்க ஊருக்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவையும், இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையும் தெரியத் தொடங்கியது (தொலைக்காட்சி எங்க ஊரில் 3 பேர் வீட்டில் தான் இருந்தது, எங்க குவைத் சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர்/ தாத்தா வி.வி. பெருமாள், எங்க தெரு ராஜா அண்ணன்,

நாங்க கிரிக்கெட் பார்க்க கூடுவது பெருமாள் தாத்தா வீட்டில் தான், ஜெயக்குமார் மாமாவுக்கு கிரிக்கெட் ரொம்பவும் பிடிக்கும், நாங்க எல்லோரும் அங்கே கூடி கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்போம், சில நேரங்களில் புள்ளி புள்ளியாக அடிக்கும், ஆனாலும் நாங்க ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்போம். காற்று அடித்தால் தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகிவிட்டால், உடனே வானொலியைத் தேடி ஓடுவோம், அங்கே சார் ரன் கேலியே என்பதை கேட்டது, என்னப்பா சொல்றான் என்று ஒரு பெரியவர் கேட்க, அது ஒன்னும் இல்லை, சொல்லுபவருடைய சாரங் (லுங்கி) கிழிந்து விட்டதாம் என்று கிண்டல் செய்வோம். அப்போ எல்லாம் ஹிந்தியில் பச்சாஜ், தஸ் ரன், சடுக்கா, ஓகயா என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு ஒன்றுமே புரியாமல் விழித்திருக்கிறோம், எத்தனை ரன் என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் தத்தளித்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும்.

அப்போ தான் ஒரு போட்டியில் இலங்கை அணியினர் நாம் வெற்றி பெற இருந்த நிலையில் வெளிச்சம் இல்லை என்று சொல்லி போட்டியை நிறுத்த, நாங்க மொத்த சிங்களவர்களையும் திட்ட, அதை மறக்க முடியாது.

அது மாதிரி மறக்க முடியாத போட்டி கடைசி பந்தில் சேட்டனின் பந்தில் மியாண்டட் சிக்ஸர் அடிக்க, எளவு வீட்டுக்கு போய் வந்தவங்க மாதிரி நாங்க இருக்க, அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, சோறு தண்ணீ இறங்க வில்லை, இரவு முழுவதும் அழுது இருக்கிறேன். பல நாட்கள் கனவில் நான் பந்து வீசி மியாண்ட் மண்டையை உடைத்து, கடைசி பந்தில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கிறேன்.

இவ்வாறாக தொலைக்காட்சியில் பார்த்து பார்த்து கிரிக்கெட் மேல் வெறி வர, சிறுவர்கள் அனைவரும் மூர்த்தி அண்ணாவின் தலைமையில் ஒரு கிரிக்கெட் அணியை தோற்றுவித்தோம், அதுவே என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.


ஆரம்ப காலத்தில் நாங்க தென்னை மட்டையையும், பனை மட்டையையும் அழகாக செதுக்கி மட்டை உருவாக்குவோம், தென்னை மட்டை உடனே உடைந்து விடும், அதற்காக அகலமான பனை மட்டையை தேடி அதில் அழகாக செதுக்கி, அதற்கு சைக்கிள் டயரை குட்டி குட்டியாக வெட்டி கைப்பிடியில் மாட்டி, அதை பெருமையாக (எமனின் கதை மாதிரி) தோளில் தூக்கி அழைவதில் தனி மகிழ்ச்சி கிடைத்தது.

அப்புறம் வசதி படைத்த பசங்க பைசா கொடுக்க ரப்பர் பந்து வாங்குவோம், சில பந்துகள் பல மாதங்கள் எங்க மரண அடி தாங்கும், சில பந்துகள் ஒரே அடியில் கைலாய மோட்சம் அடையும், அதற்கு துக்கம் தெரிவித்து நாங்க அழுததை நினைத்தால் சிரிப்பு தான் வரும். அந்த பந்தை வாங்கி வந்தவனின் முதுகில் டின் கட்டி விடுவோம். அதன் பின்பு நான் தான் பர்சேசிங் மேனேஜர், எங்க மாமா கடைக்கு போய் கேரண்டி, வாரண்டி எல்லாம் கேட்டு வாங்கி, ஒரு பந்து வாங்க கடையில் இருக்கும் அத்தனை பந்தையும் தரையில் தூக்கிப் போட்டு, நல்ல பந்தை கண்டுபிடித்து வாங்கி வருவேன்.

அப்போ தான் சென்னையில் இருந்து வந்த ஒரு நண்பன் சொன்னான், ரப்பர் பந்து வாங்கியதும் அதில் ஊசி வைத்து ஒரு சின்ன துளை போட்டு விட்டால் பந்து என்ன அடி அடித்தாலும் தாங்கும் என்று சொல்ல, அவனை நாங்க கடவுள் மாதிரி பார்த்தோம்.

Image hosted by Photobucket.com
பந்து கிடைக்காத நேரத்தில் கொமட்டிக்காய், பனங்கொட்டை, தென்னங்குறும்பல், சைக்கிள் டயர் ரப்பரை வளையம் வளையமாக வெட்டி தயாரித்த பந்து இப்படியாக கையில் கிடைத்ததை எல்லாம் பந்தாக உபயோகிப்போம்.

நாங்க கிரிக்கெட் ஆரம்பித்த சில காலத்தில் எங்க ஊரில் நிறைய தெருக்களில் ஆரம்பித்து விட்டார்கள், தெக்குத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, பள்ளிவாசல் தெரு, இப்படி நிறைய அணிகள்.

அதே நேரத்தில் எங்க அணியிலும் போட்டி, பொறாமைக் காரணமாக பல அணிகள் (குறைந்தப்பட்டம் 2 பேர்) தொடங்கி விட்டார்கள், பைசா இருப்பவன் எல்லாம் தலைவன், அவன் தானே பந்து வாங்கி வருவான் அதான்.,

Image hosted by Photobucket.com
மூர்த்தி அண்ணா டீம், போஸ் அண்ணா டீம், தெக்குத்தெரு டீம் எல்லாம் புகழ்பெற்றவை. ஆரம்பத்தில் என்னை எல்லோரும் பந்து பொறுக்கத் தான் அழைப்பார்கள். அத்தனை திறமையாக விளையாடத் தெரியாது. எல்லோரும் அவுட் ஆனதும் டவுட்டாகவே என்னை பேட்டிங்க் செய்ய அனுப்புவார்கள். எனக்கு ப்ரண்ட் புட், பேக் புட், ஹீக்சாட், கவர் டிரைவ் என்று ஒன்றும் கிடையாது, கண்ணை மூடிக் கொண்டு ஒரு சுத்து, பந்து மட்டையில் பட்டதா அல்லது கட்டையில் பட்டதா என்பது கண்ணை திறந்தால் தான் தெரியும், சில சமயம் சுத்துத சுத்தில் கட்டையில் விழுந்து அவுட் ஆகி இருக்கிறேன்.

Image hosted by Photobucket.com
எங்க ஊரில் கிரிக்கெட் பிரபலம் ஆக ஆக,நிறைய ஆட்டக்காரர்கள், திறமையானவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் (செலக்சன் கமிட்டியில் பைசா உள்ளவனுக்கும், சொந்த மட்டை வைத்தவனுக்கும் இடம்), என்பதால் நான் வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன், எவனுக்காவது அடி பட்டால் எனக்கு மகிழ்ச்சி பொங்கும், இடமும் கிடைக்கும். மட்டை அடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் பீல்டிங்கில் ஓடியாடி பந்தை தடுத்து மகிழ்வேன். சில நேரங்களில் அதற்கு கூட எப்போ அழைப்பார்கள் என்று இளவு காத்த கிளி மாதிரி காத்திருப்பேன்.


அப்புறம் கொஞ்ச நாளிலேயே என்னை விட சின்னப் பையன் எல்லாம் தன் திறமையால் அணியில் இடம் பிடிக்க, எனக்கு பொறாமை பிடிக்கத் தொடங்கியது. எனக்குள் வெறி எப்படியும் நாமும் நன்றாக ஆடி அணியில் இடம் பிடிக்க வேண்டும், அதற்காக எங்க வீட்டு தோட்டத்தில் ஒரு குரும்பலை கையில் எடுத்து தூக்கிப் போட்டு, அதை உடனே தென்னம்மட்டையால் ஓங்கி அடிப்பேன், நான் அடிப்பது எல்லாம் மட்டையில் படும் வரை தொடர்ந்து அடித்து பழகிக் கொண்டேன், சில நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் மேலே பட, அதை அறிந்த என் அம்மா என்னை போட்டு சாத்த, இப்படியாக பேட்டிங்கை நான் கற்றுக் கொண்டேன், கொஞ்ச நாளில் பணம் சேர்த்து வைத்து ஒரு பந்தை வாங்கி, யாருக்கும் தெரியாமல் எங்க வீட்டு சுவற்றில் அடித்து அடித்து பேட்டிங்க் பழகினேன். அப்படி விளையாடும் போது தான் முன்னால், பின்னால் சென்று ஆடும் திறமையை வளர்க்க முடிந்தது (வீட்டில் பல்ப் உடைத்து, உதை வாங்கியது தனிக்கதை).

Image hosted by Photobucket.com
ஒருவழியாக எனக்கும் பேட்டிங்க் தெரியும் என்று நம்பி என்னை அணியில் சேர்த்தார்கள், மேலும் பீல்டிங் நன்றாக செய்வேன். அப்படி அணியில் இடம் பிடித்தும், எனக்கு பேட்டிங்க் என்னவோ கடைசியில் தான் கிடைக்கும், ஊரில் மட்டையை சுத்துபவங்க எல்லாம் பேட்ஸ்மேன் என்பதால் பவுலிங்கில் ஆள் குறைவாக இருக்க நான் பவுலிங்க் போட ஆசைப்பட்டேன். அப்போ தான் பேட்டிங்க், பீல்டிங்க், பவுலிங்க் என்று தொடர்ந்து ஏதாவது செய்ய முடியும் என்ற ஆசை, மேலும் எனக்கு மானசீக குருவாக எல்லாத்தும் மேலாக கிரிக்கெட் இறைவனாக கபில்தேவ் அவர்களை மனதில் நிறுத்திக் கொண்டேன், பெயரில் கூட கபில் என்பதை சேர்த்துக் கொண்டேன், பள்ளி தேர்வில் என் பெயரோடு கபில் பெயரை எழுதி ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. வீடு முழுவதும் கபில்தேவ் படங்களாக மாட்டி வைத்திருப்பேன். இன்றும் கபில்தேவ் என்னோடு இருக்கிறார்.

Image hosted by Photobucket.com

இனிமேல் சிறப்பான பெயரையும் அணி நம்மைத் தேடி வரவும் ஆல்ரவுண்டர் ஆவது தான் சிறந்தது என்று பவுலிங்க் போடத் தொடங்கினேன் கொண்டேன். அங்கே தான் என் போராட்டம், நம்பிக்கை, வெற்றி எல்லாமே தொடங்கியது.

(நினைவலைகள் ஓய்வதில்லை ….)

0 Comments:

Post a Comment

<< Home