Tuesday, June 06, 2006

வேட்டையாடு விளையாடு – புட்டான்

சின்ன வயசு நடந்த சம்பவங்களை இப்போ நெனச்சி பார்த்தாலும் சந்தோசமாகத் தான் இருக்குது. அதை அப்போ அப்போ சிவாவின் பதிவுகள் படித்து அனுபவிச்சியிருக்கிறேன்.

கிராமம் என்றாலே அங்கே வெளையாட்டும் வேட்டையாடுதலும் இல்லாம இருக்காது.

என்னுடைய மொத வேட்டையாடுதல் எப்படி தொடங்கிச்சின்னா, புட்டான் (தும்பி) பிடிக்கிறதிலயும், கலர் கலர் ஈ பிடிக்கறதிலயும் தான்.

புட்டான் பிடிக்கும் கலையே தனிதான், செடியில் அமர்ந்திருக்கும் புட்டானை, சவுண்டே வுடாம நைசா பூனைக்கணக்கா கிட்ட போய், அதன் வாலை பிடிக்க வேண்டும், பிடித்தவுடன் உடனே அதன் ரக்கையை பிடிக்கணும், இல்லேன்னா வெட்டருவா புட்டான் கடிச்சிபுடும். நான் கடியும் வாங்கியிருக்கேன்.

புட்டான்கள் பலவகையுண்டு. சின்னதா இருப்பது கொசு புட்டான், அதை பிடிக்கிறது மகா கஷ்டம். அப்புறம் மஞ்ச நிறத்தில் இருக்கிறதுக்கு பேரு எங்க ஊரில் திருடன், ஊதா நிறத்தில் திருடன் சைசிலேயே இருக்கும் புட்டானுக்கு போலிஸ்காரன்னு பேரு, காரணம் ஊதா புட்டானை கண்டதும் மஞ்ச புட்டான் பறந்துடும். அப்புறம் டேஞ்சர் புட்டான் நம்ம வெட்டருவா தான்.

வெட்டருவா புட்டான் பச்சை நிறத்தில் போலிஸ் திருடனை விட கொஞ்சம் பெரிசா இருக்கும். மகா மோசமான புட்டான், அவன் கிட்ட போலிஸ், திருடன், கொசு இப்படி யாரு மாட்டினாலும் கடிச்சு துன்னுபுடுவான்.

அப்புறம் செல சமயம் நல்ல கலர் கலரா புட்டாங்கள் வரும், வந்துட்டா, யாரு நல்ல அழகான புட்டான் வச்சிருக்கானோ அவனுக்கு தனி மரியாதை, அந்த பயவுள்ள ராத்திரி அதை ஒரு அட்டை பெட்டியில் வைத்திருப்பான்,
காலையில் பார்த்தால் எறும்புங்க தின்னுட்டி இருக்கும்.

வைக்கப்டப்பு இருக்கிற இடத்துல செவப்பு நெறத்துல நிறைய புட்டாங்கள் பறக்கும், அதை நாங்க வெளக்குமாரு வைச்சி அடிச்சி புடிப்போம்.
நான் பயப்படுகிற புட்டானே, அந்த மல புட்டான் தான். அதை மலை புட்டான்னு சொல்லுறதா இல்லை மழை புட்டான்னு சொல்லுறதான்னு இன்னும் கொழப்பம் இருக்குது, சிவாகிட்ட தான் கேட்கணும்.

மழை பேஞ்சா ஒடனே வந்துடும், அய்யோ ராத்திரி லைட் மேலே மோதிகிட்டே இருக்கும், திடிரென்று ராக்கெட் வேகத்தில் கீழே பாயும், நான் பயந்து ஓடுவேன். செல சமயம், நம்ம மேலே, சட்டையில் இருக்கும், அதை தம்பி சொல்ல, அய்யோ, குய்யோன்னு சட்டையை கழட்டி போட்டு ஓடுவேன். அப்புறம் அம்மா வெளக்குமாத்தை கொடுக்க, வீராதி வீரன் என் தம்பி, தைரியமாக அதை அடித்து ஒரு கையால் பிடிச்சி வெளியே வீசிடுவான், அடுத்த நாள் எங்க வீட்டு எறும்புகளுக்கு பிரியாணி தான்.

செல சமயம், நம்ம கூட்டாளிங்க மழை புட்டானை பிடிச்சிட்டு வந்து அதன் வாலில் நூலை கட்டி விடுவான்க, அது அங்கேயும் இங்கேயும் ஓடும், செல பயலுக நூலை இழுக்க, வால் அறுந்துடும், அவனை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவோம். செல சமயம் புட்டான் பறந்து வேப்ப மரத்து உச்சிக்கு போயிடும், நாங்களும் விட்டுட்டு அடுத்த் ஆட்டத்துக்கு போயிடுவோம்.

எங்க ஊரு கோயிலு கொடை வந்துட்டா போதும், கிடா வெட்டுவாங்க தானே. விழா முடிஞ்சதும், எங்க கூட்டாளிகள் எல்லாம் காட்டுக்குள்ள மண் கோயில் கட்டுவோம், மண் சட்டியில் பேப்பரை ஒட்டி, கொட்டு தயார் செய்வோம், பூவரசு எலையை எடுத்து பீப்பீ செய்வோம், ஆளுக்கு ஒரு இசைக்கருவி.
அப்புறம் சாமியாட ஒருவர், விபூதி, சாம்பிராணி, சாமி எல்லாம் தயார். அப்புறம் கிடாவுக்கு எங்கே போறது, இருக்கவே இருக்குது நம்ம புட்டான்கள்.
நாங்க புட்டான்களை புடிச்சிட்டு வந்து கொடுக்க, சாமியாடி ஆடிக்கொண்டே கிடா வெட்டுவார், நல்ல பனைமட்டை ஓரத்தில் இருக்கும் கருக்கை கத்தியாக்குவார், ஒரே வெட்டு, தல துண்டாயிடும், இப்படி 20, 30 கிடா வெட்டுவார்.

இதை ஒரு நாள் எங்க அம்மா கிட்ட யாரோ போட்டு கொடுக்க, எங்க வீட்டில் பெரிய பூசையே நடந்தது, அப்புறம் ராத்திரி ஒரு கதை சொன்னாங்க.
ஒரு முனிவராம், ரொம்ப ரொம்ப நல்லவராம், ஒரு முறை அவர் தவறே செய்யாமல் ஒரு அரசர் அவரை பிடிச்சி, மரத்தில் கட்டி வைத்து உடம்பு எல்லாம் ஈட்டியால் குத்தச் சொல்லி கொன்னுடுவார், முனிவரும் கொடுமைகள் எல்லாம் அனுபவிச்சு, செத்து சித்திரகுப்தனிடம் போவார், அங்கே போய் அவரிடம் சண்டை போடுவார், நான் ரொம்பவும் நல்லவன், எப்போவும் இறைவனையே வேண்டுபவன், எப்படி என்னை அந்த அரசன் கொடுமைப்படுத்தி கொன்றான், நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டாராம்.

அதுக்கு சித்திரகுப்தன் ரிஜிஸ்டரை எடுத்து தேதி வாரியாக சின்ன வயசில் நீர் புட்டான்களை பிடிச்சி கொன்னிருக்கீரு, அதான் உமக்கு இந்த தண்டனை என்றாராம்.

இதை சொல்லிட்டு அம்மா, அய்யா! அந்த முனிவருக்கே இந்த தண்டனை என்றால், உனக்கு எப்படி எல்லாம் தண்டனை கிடைக்கும், நினைச்சு பாரு, இனிமேல் அப்படி செய்யாதே, பாவமுண்ணு ஒரு அறிவுரையோடு கதையை முடிச்சாங்க, நானும் அத்தோடு புட்டான்களை கொல்லுறதை விட்டுட்டேன், ஆனா கருந்தேள் பிடிக்கத் தொடங்கிட்டேன். ஏன்னா, தேளை கொன்னா தண்டனைன்னு அம்மா கதை சொல்லலையே?

அது அடுத்த கதை, கருந்தேள், மஞ்ச தேளை எப்படி புடிப்போமுன்னு வெளாவாரியா அடுத்தவாட்டி சொல்றேன்.

12 Comments:

At 4:45 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

:)

 
At 5:04 AM, Blogger Thangavel said...

பரஞ்சோதி,
புட்டான் பிடித்த அனுபவம் ரசிக்க முடிந்தது. பழய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது. என் குழந்தைக்கு இதெல்லாம் கிட்டுமா எனக் கவலையும் உள்ளது. அது சரி, நீங்க திருநெல்வேலியா, ரொம்ப மகிழ்ச்சி.

 
At 7:18 AM, Blogger Kuppusamy Chellamuthu said...

அதெல்லாம் சரிங்க. பரஞ்சோதின்னாலே 'சிவகாமியின் சபதம்' தளபதி நினைவு தான் எனக்கு வருகிறார்? நீங்கள் ஏதோ வேலேந்தி வரும் வீரராகவே என் மனத்திரை முன் நிற்கிறீர்கள். என்ன பண்ணட்டும்??

-குப்புசாமி செல்லமுத்து

 
At 7:44 AM, Blogger (துபாய்) ராஜா said...

அன்பு பரஞ்சோதி,நம் போன்ற
திருநெல்வேலிகாரர்கள் தான் இதுபோன்ற பலவிடயங்களை நன்கு அனுபவித்துள்ளோம் போல் தெரிகிறது...

 
At 8:08 AM, Blogger செயபால் said...

சின்ன வயது விளையாட்டுக்கள் ஞாபகம் வருதே!!!

ஈழத்தில் விளையாடிய இதையொத்த விளையாட்டுகள்.

1. தும்பி பிடித்தல், வாலில் நூல் கட்டிப் பறக்க விடுதல்
2. வண்ணாத்திப் பூச்சி பிடித்தல், ஒரு வகைச் செடியைப் (பேர் மறந்து போச்சு) பிடுங்கிக் கொத்தாக்கி அதனால் மெல்ல அடித்துப் பிடிக்கவேண்டும்.
3. சில்வண்டு பிடித்தல் (கடிக்கும், சிறுநீர் அடித்துவிடும்)
4. அட்டைகள் பிடித்தல்
மூன்று வகை அட்டைகள் இருந்தன.

சரக்கட்டை கறுப்பும் மஞ்சளுமாக இருக்கும்

பேனையட்டை - பேனா போலிருப்பதால் இந்தப் பெயர், கறுப்பு

சிவப்பு அட்டை சரக்கட்டைக்கும் பேனையட்டைக்கும் இடைப்பட்ட பருமன்.

எல்லாம் உயிர் வதை தான். பாவம். முனிவர் கதை தான்.

 
At 3:18 AM, Blogger தாணு said...

பரஞ்சோதி
அந்தக் காலத்தில் புட்டான் புடிக்க மண்டி போட்டு முட்டி சிராய்த்த தழும்புகள் இன்னும் கூட இருக்கு, இளமைகால வசந்தங்களின் நினைவாக.

 
At 5:57 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க கொத்தனாரே!

என்ன சிரிச்சிட்டு போயிட்டீங்க. எங்க உங்க கொலைப்பட்டியலை சொன்னா இமேஜ் டேமேஜ் ஆயிடுமுன்னா :)

 
At 6:03 AM, Blogger பரஞ்சோதி said...

//Thangavel said...

பரஞ்சோதி,
புட்டான் பிடித்த அனுபவம் ரசிக்க முடிந்தது. பழய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது. என் குழந்தைக்கு இதெல்லாம் கிட்டுமா எனக் கவலையும் உள்ளது. அது சரி, நீங்க திருநெல்வேலியா, ரொம்ப மகிழ்ச்சி. //

வாங்க வாங்க தங்கவேல் அவர்களே!

ஆமாம், எனக்கு திருநெல்வேலி பக்கம் தான், திருச்செந்தூர் அருகில் ஒரு கிராமம். காயாமொழியிலிருந்து 3 கிலோ மீட்டர்.

நீங்க சொன்ன மாதிரியே தான் நம்முடைய குழந்தை பருவம் போல், இப்போதைய குழந்தைகளின் வாழ்க்கை அமையுமா என்று தெரியலை. அதனால் தான் என் மகளை ஊருக்கு, ஆடு, மாடு, கோழிகளோடு விளையாட 2 மாதம் அனுப்பி வைத்தேன்.

நீங்களும் வாய்ப்பு கிடைக்கும் போது உங்க பிள்ளைகளிடம் உங்க கிராமத்து வாழ்க்கையை சொல்லுங்க, ஆர்வம் உண்டாக்குங்க, கூடுமானவரை கோயில் கொடை போன்றவற்றிக்கு போய் வாங்க.

 
At 6:06 AM, Blogger பரஞ்சோதி said...

// Kuppusamy Chellamuthu said...

அதெல்லாம் சரிங்க. பரஞ்சோதின்னாலே 'சிவகாமியின் சபதம்' தளபதி நினைவு தான் எனக்கு வருகிறார்? நீங்கள் ஏதோ வேலேந்தி வரும் வீரராகவே என் மனத்திரை முன் நிற்கிறீர்கள். என்ன பண்ணட்டும்??

-குப்புசாமி செல்லமுத்து //

வாங்க சார்,

என்ன இப்படி போட்டு வாங்குறீங்க.

எங்க கிராமத்துல நான் வேலேந்த வில்லை, ஆனால் கிரிக்கெட்டிலும் குச்சிகம்பு (கில்லி) போட்டிகளில் கில்லாடியாக திகழ்ந்தவன்.

 
At 6:08 AM, Blogger பரஞ்சோதி said...

ராஜா,

உங்ககிட்டவும் பல கதைகள் இருக்கும் போலிருக்குதே!

நேரம் கிடைக்கும் போது எடுத்து விடுங்க.

 
At 6:20 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க ஜெயபால் சார்,

நீங்களும் என்னை மாதிரி கிராமிய வாழ்க்கையை நல்லா அனுபவிச்சியிருக்கீங்க போலிருக்குதே.

நான் அட்டையை எல்லாம் பிடிச்சது இல்லை, ஒரு பயம் தான்.

எங்க அம்மா கிணறு, குளம், குட்டை பக்கம் தண்ணீரில் விளையாட அனுமதி கொடுத்ததே இல்லை.

தாமிரபரணியில் ஓடுகிற தண்ணியில் தரையில் அமர்ந்து செம்பில் மொந்து மொந்து குளித்த ஒரே ஆள் நான் தான்.

 
At 6:22 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க அக்கா, வாங்க.

நம்ம ஊர்க்கதை சொல்லும் போது நீங்க வரலன்ன எப்படி?

அப்புறம் நம்ம ஊர் வெளையாட்டு எல்லாம் சொல்ல போகிறேன், வந்து பாயிண்ட் கொடுங்க.

 

Post a Comment

<< Home