Wednesday, June 07, 2006

வேட்டையாடு விளையாடு - கருந்தேள்

போன வாட்டி நான் சின்ன வயசுல தும்பி/புட்டான்/தட்டான் புடிச்ச கதையை சொன்னேன்.

வருசம் முழுவதும் தும்பி, பட்டாம் பூச்சி/வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் விளையாடு விளையாடுவோம்.

மழைக்காலம் வந்தால் எங்க ஊரில் பட்டுப்பூச்சின்னு ஒரு பூச்சி வரும், அய்யோ எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? சிறிய வண்டு மாதிரி தான், ஆனால் பஞ்சு மாதிரி உடம்பு முழுவதும் பட்டு துணி/கம்பிளி போர்த்தியது போல் சிவப்பாக பளபளக்கும். கையில் எடுத்தால் கால்களை எல்லாம் மடக்கிக் கொண்டு சுருண்டு போய் அமைதியாக இருக்கும், கடிக்கவும் செய்யாது, அது எப்படி வருது, எப்படி போகுதுன்னு இதுவரை தெரியவில்லை, ஏதோ வானத்தில் மழை பெய்யும் போது விழுதுண்ணு சின்ன வயசிலே பேசிக்குவோம்.

தினமும் அதை சேகரிப்போம், ஒரே நாளில் அது மண்டையை போட்டும், பள்ளிக்கூடத்துக்கு (5வது படிக்கும் வரை) போகும் போது அதையும் கொண்டு போயிடுவோம், ஒரு பக்கம் நான் என்னுடையதை விட, அடுத்த முனையில் என் கூட்டாளி அவனது பட்டுப்பூச்சியை விட, யாருடையது முதலில் நடுமத்திசெண்டர் போகுதுன்னு பார்ப்போம்.

செல சமயம் இப்படி வெளையாட, முதுவில் டீச்சர் ஓங்கி ஒரு அறை வைப்பாங்க, அதன் பின்னரே ஆட்டம் தடை படும்.

ஒருவழியாக 6வது வகுப்பு போன போது, வாழ்க்கை பருவத்தில் அடுத்த நிலைக்கு போனமாதிரியான ஒரு எண்ணம், பெரியவங்களை பார்த்து அவங்களை மாதிரி நடக்க ஆசைப்படுதல் எல்லாமே தொடங்கியது, அப்போ தான் பட்டம் விடும் விளையாட்டு, கோலி, சோடா பாட்டில் மூடி, சிகரெட் அட்டை, பம்பரம், கபடி எல்லாம் தொடங்கியது.

அப்போ எனக்கு கூட்டாளி, குருவாக முருகன் கிடைச்சான். முருகனுக்கு என்னை விட ஒரு வயசு கூட, எங்க தெருவிலேயே 3 முருகன்கள், அதில் ஒருவரை மட்டும் அண்ணன் என்று அழைப்பேன், அவர் இப்போ இங்கே எங்க வீட்டுக்கு எதிரே தான் குடும்பத்தோடு இருக்கிறார், சக்திக்கு தினமும் விளையாட ஒரு அத்தை இருக்காங்க.

தோழன் முருகன் சரியான வால், வீட்டிலேயே இருக்கமாட்டான், எப்போ பார்த்தாலும் ஏதாவது சேட்டை செய்துகிட்டே இருப்பான், கொரங்குப்பய என்றே எல்லோரும் அவனை சொல்லுவாங்க.

ஒரு தடவ, எங்க தெருவுக்கு அடுத்த தேரிக்காட்டுக்குள்ள போய் பிள்ளையார் பந்து விளையாடினோம், ஒருத்தன் வீசின பந்து அங்கே இருந்த பாழடைந்த கெணத்துல விழுந்துட்டது, அவனை போட்டு முருகன் நல்லா சாத்திட்டான், அவனும் அழுதுட்டே இருக்க, முருகன் அவனை சமாதானம் செய்ய, “சரி சரி! நான் ஒனக்கு நட்டுவக்காலி பிடிச்சு விளையாட சொல்லித்தாரேன்னான்.

எனக்கு ஒன்னுமே புரியலை, நட்டுவக்காலியை பிடிப்பதா? அது எப்போவாவது வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள வரும், எங்க கண்ணுல பட்டால் அடுத்த நிமிடமே பரலோகம் போயிடுமே. இங்கே காட்டுக்குள்ள எங்கே பிடிப்பான் என்று நெனைச்சேன்.

நெறைய கொழுஞ்சி செடி இருக்கும் இடத்துக்கு போனான், அப்படியே தரையில் ஊர்ந்து கொண்டு ஒவ்வொரு செடியின் மூட்டையும் பார்த்துக் கொண்டே போனான், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய குச்சியை கொண்டு வரச் சொன்னான். அங்கே ஒரு சின்ன பொந்து, நாலு விரல் நுழையும் அளவு துவாரம், அதில் ஒரு குச்சியை எடுத்து விட்டான். குச்சியான நன்றாக உள்ளே போனதும், மட மடவென்று மண்ணை கையால் கிண்டி, தோண்டினான், அப்புறம் ஒரு ஒடைஞ்ச மண்சட்டி ஓட்டை வைத்து வேகமாக தோண்டினான், குச்சி சென்ற அளவுக்கு தோண்டியதும், மீண்டும் குச்சியை பல திசைகளில் நுழைத்தான், ஒரு பக்கம் குச்சி விட்டதும் நுழைந்து விட்டது, முழு குச்சி நுழையும் அளவுக்கு விட்டு மீண்டும் தோண்டினான், இப்படியாக நாலு, அஞ்சு மொறை செய்த பின்பு, எல்லோரையும் தள்ளிப்போகச் சொன்னான்.

நான் 10 அடி தூரம் தள்ளி போயி நின்னுட்டேன், கையில் பெரிய கல்லை வேறு எடுத்து வைச்சிக்கிட்டேன், பாதுகாப்புக்குத்தான்.

கொஞ்ச நிமிடத்தில் மண்ணை பொழந்துக்கொண்டு பெரிய நட்டுவக்காலி (கருந்தேள்) வந்தது, அய்யோ பொட்டபுள்ளங்க எல்லாம் ஓடிட்டாங்க, நானும் 4 அடி பின்னாடி போயிட்டேன். முருகன் மட்டும் தேளை அந்த குச்சியால் நோண்டினான், அது குச்சியை படக் படக் என்று கொட்டியது. கொஞ்ச நேரம் கொட்ட வைத்த பின்பு, அந்த குச்சியால், தேளை மண்ணோடு அமுக்கி பிடிச்சிக்கிட்டு, கொடுக்கை மட்டும் ஒரு கல்லை வைத்து தட்டி எடுத்துட்டான். இப்போ பயமே இல்லைன்னு தேளை கையில் எடுத்து ஓட விட்டான், அய்யோ எனக்கு ஒடம்பு எல்லாம் புல்லரிச்சுட்டுது. பயமாக இருந்தது. அப்புறம் முருகன் அந்த தேளை எடுத்து ஒவ்வொருத்தர் மேலும் தூக்கிப் போட, நான் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறம் அடுத்த நாளும் முருகனை கூப்பிட்டுகிட்டு ஒரு பெரிய படையே கிளம்பியது, கருந்தேள் பிடிக்கத் தான்.

இந்த முறை முருகனின் மாணவன் முத்து தோண்டினான், தேள் வரும் நிலை வந்ததும், முருகன் வந்து கொடுக்கை பிடுங்கினான், அன்று நாலு, அஞ்சு தேள் பிடிச்சிட்டோம், அப்புறமா மாயாண்டி தாத்தா வீட்டு திண்ணையில் விட்டு தேள் ரேஸ் வச்சோம். அப்புறம் இரு தேள்களை கிளாடியேட்டர் ஸ்டைலில் சண்டை போட வச்சோம், அப்புறமா ஒரு தேளின் வாலில் நூலைக்கட்டி இரு பக்கமாக இழுக்க வைச்சோம், இப்படி எல்லாம் செய்து முடிக்க, எங்க தேள் விளையாட்டு எங்க அம்மாகிட்ட என் தம்பி போட்டு கொடுக்க, அம்மா வந்து நாலு சாத்து சாத்தினாங்க.

வீட்டுக்கு வந்த பின்பு எங்க அம்மா, யாரோ ஒருவரை தேள் கொட்டியதால் விஷம் ஏறி செத்து போயிட்டார், ஒருவருக்கு கை, கால் விளங்கலைன்னு கதை சொன்னாங்க. அதிலும் மஞ்ச தேள் ரொம்ப விஷமுன்னு சொன்னாங்க.

அப்புறம் எங்க அத்தை பொண்ணு, அத்தை மகன் எல்லாம் லீவுக்கு, கோயில் கொடைக்கு ஊருக்கு வந்தால், தேள் பிடிக்கும் வித்தையை காட்டி அசத்தியிருக்கிறேன்.

ஒரு நாள் அப்படி தான் வீட்டு வாசப்படி மேல சாவி இருக்கும் அதை எடுக்க கையால் தடவ, படக்குன்னு ஏதோ குத்திச்சி, வேகமாக கையை எடுத்தால் மஞ்ச தேள் ஒன்னு கீழே விழுந்தது, அவ்வளவு தான், அய்யோ அம்மான்னு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டிட்டேன். அம்மா அதை வெளக்குமாத்தால அடிச்சி கொன்னுட்டாங்க, எனக்கோ வலி தாங்க முடியலை, அழுது புரண்டேன். உடனே அம்மா, பக்கத்து வீட்டு சுப்பையா மாமா, கோபால் மாமா வீட்டு அத்தை என்றே தெருவே கூடிட்டது, ஆளுக்கு ஒரு வைத்தியம் சொன்னாங்க, ஏதேதோ குடிக்க சொன்னாங்க, எனக்கோ விர் விர்ன்னு வலி ஏறியது. உடனே தம்பி டாக்டர் மாமா கிட்ட போய் ஒரு ஊசி போட்டாங்க, செல மாத்திரையும் கொடுத்தாங்க, அதன் பின்னர் வலி போயிட்டது, ராத்திரி பூரா தூக்கமே இல்லை, எங்கே செத்து போயிடுவேனோன்னு, காலையில் முழித்தவுடன் தரையில் கால் படுதான்னு பார்த்தேன், நல்ல வேளை உசுரோடு தான் இருந்தேன். அதன் பின்னர் அடிக்கடி கை வலிக்கும், ஊறல் எடுக்குமா, உடனே வெஷம் இன்னமும் இருக்குது, அதை இறக்கணும், அதுக்கு மசூதியில் ஓதும் பாய் மந்திரிச்சு கொடுக்கும் தேங்காய் எண்ணேய் தேய்த்தால் போதும் என்று சொல்ல, எங்க அத்தை சீறுடையார் புரத்துக்கு கூப்பிட்டு போய் பாய்கிட்ட சொல்ல, அவரும் தேங்காய் எண்ணேயை ஓதி கொடுத்தார்.

அவர் கொடுத்த எண்ணேயை போட்டால் வலியே காணமல் போயிடும், அதன் பின்னர் அந்த எண்ணேய் யப்போ பூச்சி கடிச்சாலும் போடுவோம், உடனே சரியாயிடும்.

அதன் பின்னர் முருகன் சொன்னான், ஒரு தடவை தேள் கொட்டிட்டா, அதன் பின்னர் தேள் கொட்டினா விஷம் ஏறாதுன்னான். அதன் பின்னர் தேள் பிடிக்கும் விளையாட்டு சூடுபிடிச்சது, பாழடைந்த கெணத்துல சைடுல இருக்கும் பாறையை உயர்த்தினா செல சமயம் மஞ்ச தேள் எல்லாம் கிடைக்கும், செல சமயம் குட்டி குட்டியா தேள் குட்டிகள் ஓடும்.

கிரிக்கெட் ஆடும் போது ஒரு முறை அடிச்ச பந்து பனமரத்துக்கு அடியில போய் விழ, அங்கே போனா இரண்டு தேள் புதுசா கல்யாணம் ஆன மாதிரி இருந்தாங்க, அதை பார்த்த எங்க குரு (இவர் வேற, இவர் பெயரு அலிபாபா), அதுக்கு பெரிய கதையே சொன்னாரு, தேள்களின் காதல், கல்யாணம், ஆண் தேளின் கதி, இப்படி, இந்த கதை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியலை.

இங்கே, குவைத்துல கூட பாலைவனத்தில கிரிக்கெட் ஆடும் போது கோழி குஞ்சு சைஸில் தேள்/நட்டுவகாலி பார்த்திருக்கிறேன். இங்கே தேளுக்கு பதில் உடும்பு பிடிச்சிருக்கிறோம்.

எல்லாம் சரி, இவ்வளவு தூரம் தேள் புராணம் பாடிட்டு, ஒரு கதை சொல்லலைன்னா என் பேரு கெட்டு போயிடாது.

எங்க பக்கத்து வீட்டுக்காரங்க எங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுப்பாங்க, அடிக்கடி பிரச்சனை வரும், அம்மா ரொம்பவே அமைதியாக இருப்பாங்க. அவங்க வீட்டு சின்ன பசங்க எங்க வீட்டுக்கு வெளையாட வந்தா, நான் வெரட்டி விடுவேன். அப்போ அப்போ கருவேப்பிலை பறிக்க வருவாங்க, நான் அம்மாகிட்ட ஏம்மா, நீங்க அவங்களை உள்ளே விடுறீங்க, அவங்க தான் நம்ம கூட சண்டை போடுறாங்க தானே என்பேன்.

அதுக்கு எங்க அம்மா சொல்லுவாங்க, அவங்க சுபவாசம் அப்படி, அதுக்கு நாம நம்மளை மாத்திக்கக்கூடாது, நாம நாமாகவே இருக்கணும்பாங்க, அப்படி சொல்லி ஒரு தேள் கதை சொன்னாங்க.

ஒருவாட்டி ஒரு சாமியார் தன் சீடர்களுடன் ஆத்துப்பக்கமா போனாராம், அங்கே ஒரு கருந்தேள் தண்ணியில் தத்தளித்து கொண்டிருந்திச்சாம், சாமியாரும் பாவமுண்ணு அதை காப்பாற்ற தன் கையால் எடுத்தாராம், எடுத்து வெளியே வருவதற்குள் தேள் கொட்டிவிட, சாமியாரும் கையை உதறிவிட்டாராம், மீண்டும் தேள் தண்ணீரில் விழுந்து தத்தளிச்சதாம், மீண்டும் கையால் பிடிச்சி தூக்கினாராம், மீண்டும் கொட்டியதாம், இப்படியாக இருக்க, அதை பார்த்த குருவின் சீடர் “சாமி! அதான் அந்த தேள் கொட்டுதே, அதை விட்டு விட்டு போகலாமே, அதை ஏன் காப்பாற்ற நினைக்கிறீங்கன்னாராம்”

அதுக்கு குரு சொன்னாராம் “சீடனே! தேளின் தன்மையானது கொட்டக்கூடியது, அதற்கு நான் காப்பற்றத் தான் கையால் பிடிக்கிறேன் என்று தெரியவில்லை, அதுக்காக நாம நம் மனிததன்மையை விட்டு விட்டு அதை தண்ணீரிலேயே விட்டு போகலாமா? தேள் தன் வேலையை செய்கிறது, நான் என் வேலையை செய்கிறேன்”.

இதை கதையாக சொன்ன அம்மா, தேள் மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்க, ஆனா நாம அப்படி இருக்கக்கூடாது, நம் கடமையை சரியாக செய்யணும் என்றாங்க.

எனக்கு சரியான கோபம், யார் மேல, சீடன் மேல தான். குருவை தேள் கொட்டுது, குரு தான் முட்டாத்தனமாக கையை விட்டு தேளை பிடிக்கிறார், சீடனாவது ஒரு கட்டையோ, துணியோ, வேறு எதையாவது கொடுக்கலாம் தானே, ஒரு வேளை குரு பரமார்த்த குருவா? சிஷ்யன் மட்டி, அல்லது மூடனா?

இதை எங்க அம்மாகிட்ட கேட்டிருந்தால் தலையில் ஒரு கொட்டு விழுந்திருக்கும், அதான் உங்ககிட்ட கேட்கிறேன்.

அடுத்த வேட்டை : வெள்ளை எலி – விரைவில்…

6 Comments:

At 4:00 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

எங்க ஊரிலேயும் தேள் அதிகம் உண்டு. நீங்க சொன்னா மாதிரி சாவி எடுக்கப் போய் தேள் கொட்டின அனுபவம் உண்டு. அது மட்டுமில்லா பள்ளிக்குப் போகும் போது ஷூவிற்குள் இருந்து கொட்டி, அதன் பின் ஸ்கூல் பஸ்ஸில் தனியாளாய் வீடு வந்து சேர்ந்த பெருமையும் உண்டு.

தேள் கொட்டிய உடன் டாக்டரிடம் செல்வது மட்டுமில்லாமல் பக்கத்தில் ஒருவர் விபூதி வைத்து தேய்த்து விடுவார். விஷம் இறங்கிவிடுமென நம்பிக்கை.

அதே போல சுளுக்கு எடுக்க ஒரு அம்மா எண்ணெய் தேய்ப்பார். அவருக்கு இரட்டை குழந்தைகள் என்பதால் அதிகம் பவர் என்று ஒரு எண்ணம் வேறு உண்டு!

தும்பி தேள் ஆச்சு, அடுத்தது வெள்ளெலின்னு சொல்லிட்டீங்க. பாம்பு பிடிக்கறதும் உண்டுதானே?

 
At 5:52 AM, Blogger பரஞ்சோதி said...

ஆஹா கொத்தனாரே!

நீங்களும் தேளாரின் ஆசிர்வாதம் வாங்கியிருக்கீங்களா?

எங்க ஆச்சி கூட விபூதி, எண்ணேய் பூசுவாங்க, இரட்டை புள்ளையை பெத்தாங்கன்னு. என்ன தான் வீட்டிலே வைத்தியர் இருந்தாலும் வெளியே போய் தானே வைத்தியம் பார்ப்போம்.

நல்லவேளை நான் 12 படிக்கும் வரை ஷீ மாட்டிக் கொண்டு போனதில்லை, வெறும் செருப்பு தான்.

ஆனா பாருங்க ரெண்டு முறை பாம்பை என் கூடவே எடுத்துட்டு போயிருக்கிறேன். அந்த கதையை அடுத்தவாட்டி சொல்கிறேன்.

 
At 6:12 AM, Blogger Chellamuthu Kuppusamy said...

நம்ம ஆதர்ச விளையாட்டு ஓணான் வேட்டையாடறது. அத எப்ப போடப் போறீங்க பரஞ்சோதி?

-குப்புசாமி செல்லமுத்து

 
At 2:26 PM, Blogger றெனிநிமல் said...

அடடா! எங்கள் பரஞ்சோதிக்கு இப்படியெல்லாம் கூட எழுத தெரியுமா?
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
நடந்து வந்த பாதையை தனை திரும்பிப் பார்க்கின்றார்.
மீண்டும் குழந்தையாகி விடாமல் இருந்தால் சரி தானுங்கோ.

 
At 4:20 AM, Blogger பரஞ்சோதி said...

செல்லமுத்து சார்,

நீங்க கேட்டு சொல்லாம இருப்போமா?

ஓணான் மட்டுமல்ல தேன் எடுத்த வீரக்கதைகள் எல்லாம் உண்டு. அதையும் சொல்கிறேன்.

 
At 4:21 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க றெனி,

மருமகன் கெவின் எப்படி இருக்கிறார்?

ஆமாம், குழந்தை பருவத்தை நினைத்து பார்க்கையில் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுது. இப்பதிவால் பலர் தங்களது குழந்தை பருவத்தை நினைவுக்கூற முடியும் தானே. உங்க அனுபவங்களை சொல்லுங்க.

 

Post a Comment

<< Home