Tuesday, June 13, 2006

வேட்டையாடு விளையாடு - வெள்ளெலி


நான் மொதல்ல புட்டான் புடிக்கிறதையும், அப்புறம் கருந்தேள் பிடிக்கிறதையும் சொல்லிட்டேன், அடுத்தது வெள்ளை எலி வேட்டை தான்.

வெள்ளை எலி வேட்டையில நான் அதிகம் போனதில்லை, மத்த எல்லா வேட்டையும் பகல்லன்னா, வெள்ளலி வேட்டை ராத்திரியில தான் நடக்கும், அதிலும் அமாவாசை அன்னைக்கு தான் போவாங்க. எங்க அம்மா மாலை 6 மணிக்கு மேலே வெளியே போக அனுமதி கொடுக்க மாட்டாங்க, அதனால அடிக்கடி போகும் வாய்ப்பு கிடைக்கல, ஒரே ஒரு தடவை தான் போனேன், அதுவும் மாயாண்டி சுவாமி கோவில்கொடை அப்போதான், ஆனால் எங்க கூட்டாளிங்க அவங்க எலி புடிச்சதை கதையா சொல்லுவாங்களா, அதையும் சேர்த்து சொல்லுறேன்.

எங்க கிராமத்திலே அங்கே அங்கே வயலும், நிலக்கடலையும், வாழையும், தென்னந்தோப்புமா இருக்கும். ஒவ்வொருத்தர் வீட்டுக்கு பின்னாலேயும் கொறஞ்சது 10 தென்னமரமாவது இருக்கும்.

அப்படி அருமையான கிராமம், தோட்டத்தில வேலியோரமா பெரிய பெரிய பொந்துங்க இருக்கும். நாங்க கிரிக்கெட் ஆடும் போது செல சமயம் பந்து பொந்துக்குள்ள போயிடும், அப்போ நான் கையை விட்டு எடுக்க பயப்படுவேன், ஏலே! பாம்பு கீம்பு இருக்கும்லே” என்பேன்.

அப்போ என் நண்பர்கள் சொல்லுவாங்க, “ஏலே! அது பாம்பு பொந்துல்ல அது வெள்ளலி பொந்து, பாம்பா இருந்தா அதன் தடம் தெரியுமுல்ல” என்பாங்க. இருந்தாலும் நான் அந்த பக்கம் போகமாட்டேன்.

தைரியமான பசங்க போயி எடுத்துட்டு வருவாங்க, நான் அவங்க கிட்ட ஆமா எப்படி இதை வெள்ளெலி பொந்துன்னு சொன்னேன்னு கேட்டா, அதுவா! வெள்ளெலி கூட்டமா தான் இருக்கும், அதுவும் ஒரு பொந்து வழியா மட்டும் போகாது, சுத்தி சுத்தி பொந்தடிச்சி இருக்கும், ஒவ்வொரு 10 மீட்டர் தூரத்திலும் பொந்து இருக்கும், எல்லாம் பொந்தும் இணைஞ்சி இருக்கும், ஆபத்துன்னா பல பொந்து வழியாக எல்லா எலிகளும் தப்பிச்சி ஓடுமுன்னு எங்க கூட்டாளிங்க சொன்னாங்க.

நானும் அப்படியான்னு கேட்டுட்டு விட்டுட்டேன். ஒரு நாள் மாலையில் கிரிக்கெட் ஆடிட்டு வரும் போது, எங்க கூட்டாளிங்க, குசுகுசுன்னு பேசிட்டாங்க, என்னான்னு கேட்டதுக்கு, “இன்னைக்கு அமாவாசை ராத்திரி, வெள்ளெலி புடிக்க போடுறோம், வெற்றிவேல் அஞ்சாறு இரும்பு கம்பி தயார் செய்துட்டான், சுதாகர் அண்ணா 5 கட்டை டார்ச் லைட் கொண்டு வருவாங்க, முருகன் மசாலா, உப்பு எல்லாம் கொண்டு வருவான், நீயும் வாரியா?”

ஆறு மணிக்கு மேலே வீட்டட விட்டு வெளியே போகவோ, வெளியிலிருந்து பிந்தி வருவோ அம்மா அனுமதிப்பதே கிடையாது, இந்நிலையில் எப்படி போவது, என்னால் முடியாதுப்பான்னுட்டேன். முருகனும் ஆமாம், அவன் வரவேண்டாம், அவங்க அம்மா அவனை மட்டுமல்ல, நம்ம தோலை கூட உரிச்சிப்புடுவாங்கன்னு பயம் காட்டினான்.

வீட்டுக்கு வந்து என்னால எலி புடிக்க போகமுடியலைன்ன வருத்தமாக இருந்தது, ஆனாலும் அம்மாவின் ஆணையை மீற முடியதே. ஏதாவது பொய்யை சொல்லிட்டு போகலாமான்னு யோசித்தேன், ஒன்றுமே புலப்படலை, புலம்பிக்கொண்டே படுத்துட்டேன்.

அடுத்த நாள் விடியற்காலையிலேயே வழக்கம் போல் ஊற வச்ச பச்சை கடலையை துன்னுட்டு ஓட்டம் ஓடி, உடற்பயிற்சி செய்ய கிளம்பி போனேன், அங்கே போனால் முருகன், முத்து, வெற்றி எல்லாம் அங்கே படுத்துகிடந்தாங்க. நான் எழுப்பி, என்ன வீட்டுக்கு போகலையான்னு கேட்டதற்கு “செகண்ட் ஷோ சினிமா பார்த்து, அதன் பின்னர் ராத்திரி முழுவதும், வெள்ளெலி புடிச்சும், திருட்டுத்தனமாக எளநீ களவாடியும் வர நேரம் ஆயிட்டுதாம், அதான் இங்கேயே படுத்துட்டோம்”

அடப்பாவிங்களா! ராத்திரி பூரா வீட்டுக்க்கு போலையா, நல்லவேளை நான் இவன்க கூட போகலை, இல்லேன்னா அம்மா ராத்திரி பூரா என்னை காணம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க, காலையில் வீட்டுக்கு போனால் தோலை உரிச்சிருப்பாங்க. சித்தப்பாகிட்ட சொல்லி இருப்பாங்க, அவங்க வேறு கன்னாபின்னான்னு திட்டியிருப்பாங்க, முருகா என்னை காப்பாதிட்டன்னு திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கிட்டேன்.

வெற்றி சொன்னான், உன் பங்கை எடுத்து வைச்சிருக்கோம், எடுத்துக்கோன்னு சொன்னான். எனக்கு சாப்பிட மனசு இல்லை, எலியை போய் சாப்பிடுவதா என்று மூஞ்சியை சுளித்தேன்.

உடனே முத்து சொன்னான் “அண்ணே! வீட்டிலே கோழி கண்டதையும் தின்னுது, அதையே சாப்பிடுறீங்க, வெள்ளெலி கண்டதையும் சாப்பிடாது, நெல்லு, பயிரு, கடலை தான் சாப்பிடும்”.

நான் எப்போவும் கொஞ்ச பந்தா, ஈகோ, வித்தியாசமானவன்னு காட்டிக்குவேன், கடைசி வரை நான் எலி வறுவலை சாப்பிடவில்லை. ஆனாலும் வெள்ளெலி பிடிக்கும் மொறையை பார்க்க ஆசை இருந்தது.

ஒருவழியா மாயாண்டி சுவாமி கோவிலில் கொடை வந்தது. வில்லுப்பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், கதை சொல்லுவாங்க தானே, ஆனா எங்க கேங்குக்கு பிடிக்காது. அன்னைக்கு ராத்திரி வில்லுப்பாட்டு, போன வருசம் வந்தவரையே புக் பண்ணியிருந்தாங்க, அவரும் போன வருசம் சொன்ன கதையையே சொல்லத் தொடங்கினார், எல்லோரும் கொட்டாவி விட்டோம், உடனே பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசினாங்க, சுதாகர் அண்ணாவை போய் பார்த்தாங்க, எங்க பாஸ் அவரும் கிளம்பிட்டார், எல்லோரும் வெள்ளெலி புடிக்க கிளம்பிட்டாங்க. நானும் என் அம்மாகிட்ட ராத்திரி பூரா வில்லுப்பாட்டு கேட்டு தான் வருவேன், லேட்டாச்சின்னா கோயிலேயே படுத்துக்கிறேன்னு மொத தடவையா அனுமதி வாங்கிட்டேன்.

எனக்கு பயங்கரமான ஆர்வம், திரில், சொல்ல முடியாத சந்தோசம். போகிற வழியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக முருகன் பதில் சொன்னான்.

எலி எப்படி பிடிப்பீங்க ?

நம்ம கையில் பெரிய கம்பி, முனை கூறாக இருக்குதே அதை வைத்து குத்தி பிடிப்போம். இல்லாட்டி சாக்கு வைச்சி பிடிப்போம்.

கம்பியை குத்துவதுக்குள்ள எலி ஓடாதா?

எலி ஓடாது, அதுக்கு தான், எலியை பார்த்ததும், டார்ச் லைட்டை அதன் கண்ணில் அடிக்கணும், எலி ஆடாம அசையாம நின்னுடும், உடனே ஒரே குத்து, குத்தி தூக்கிடுணும்.

ஒருவேளை எலி பொந்துக்குள்ள இருந்தா?

அதுக்கு தான் மம்முட்டி இருக்கே, அதை வெச்சி வெட்டி பிடிக்கணும்.

நீ தானே சொன்னே, எலி பல பொந்து வழியா ஓடுமுன்னு, அப்போ என்ன செய்வே?

அதுக்கு தான் பொந்துகிட்ட இருக்கணும் கையில் சாக்கு பை இருக்குதுல்ல, அதை வைச்சி போத்தி பிடிக்கனும்.

பாம்பு கீம்பு பொந்துல்ல இருந்தா?

முருகன் கடுப்புல “ஏலே சும்மா வாரியா, பாம்பு இருந்தா நீயே பிடி, அதான் பாக்க போறேல்ல”

அதுக்கு மேலே பேசினா, கம்பியால என்னை குத்திப்புடுவான்னு விட்டுட்டேன். நேரா எங்க பாட்டி வீட்டு தோட்ட வேலிபக்கம் போனாங்க, அங்கே நெறைய ஒட மரம் இருந்தது, முள் கால்ல ஏறினா, மூணு நாளுக்கு வலிக்கும், அதே பயத்தில் கவனமாக போனோம்.

நைசா பூனை மாதிரி நடந்தோம், அவங்க சொன்ன மாதிரியே வெள்ளெலி நடமாட்டம் இருந்துச்சு, ஆனா நேருக்கு நேரா டார்ச் அடிக்கும் நிலையில் ஒன்னும் வரலை, வந்த ஒரு எலியையும் ஒருத்தன் தும்மல் போட்டு விரட்டிட்டான்.

அப்புறம் பொறுமை இல்லாம எல்லோரும் எலிகளை வெரட்டிக்கிட்டு போனோம், ஒவ்வொன்னும் ஒவ்வொரு தெசையில ஓடி, பொந்துல போயிட்டுது. அப்புறம் என்ன முருகன், முத்து எல்லாம் ஆளுக்கு ஒரு பொந்தை தோண்டினாங்க, நாங்க ஆளுக்கு ஒரு பொந்துகிட்ட சாக்குபையை பிடிச்சிக்கிட்டு இருந்தோம், ஒன்னும் வருகிறபாடு இல்லை.

அப்புறம் வெறுத்து போய், சரி வேற பக்கம் போகலாமுன்னு போனோம், அங்கேயும் எங்க சத்தம் கேட்டு எலிகள் ஓட்டுது, உடனே பாஸ் சொன்னார் “எலி புடிக்க கூட்டம் சேர்க்ககூடாது, மூணு பேருக்கு மேல போன இப்படி ஆகும்”

நான் மட்டுமல்ல, ஊருக்கு கோவில்கொடைக்கு வந்த பட்டினத்து பசங்க வேற வர, ஒரே திருவிழா கோஷ்டி மாதிரி தான் எலி புடிக்க போனோம்.

அப்புறம் முருகன் ஒரு பொந்தை தோண்ட நாங்க ஆவலோடு பார்த்துட்டு இருந்தோமா, சடார்ன்னு உள்ளே இருந்து ஒரு பாம்பு எங்களுக்கு பயந்து எங்க காலுக்குள்ள ஓட, நாங்க அதுக்கு பயந்து அலறி அடிச்சிட்டு ஓட, கோஷ்டி கும்பல் எல்லாமே எலிகளை விட அதிக திசைகளில் ஓடிட்டாங்க, நானும் பயந்து முள் செடி எல்லாம் தாண்டி ஒரே ஓட்டமாக ஓடி, ரோட்டுக்கு வந்துட்டேன், கை, கால், முட்டி, எல்லாம் முள் கிழித்து ரத்தம் வந்தது, நல்லவேளை பாம்பு கடிக்கலைன்னு மனசை தேத்திக்கிட்டு கோயிலுக்கு வந்தேன். அங்கே எனக்கு முன்னாடியே பல பயலுக்கு வந்துட்டாங்க. எங்க பாஸ், சுதாகர் அண்ணா, முருகன் மூணு பேர் மட்டும் வரலை.

கொஞ்ச நேரத்தில மூணு பேரும் வந்தாங்க, எலே! கோயிலுக்கு பின்னாடி வாங்கலே! எளநீ வெட்டி வந்திருக்கோம், சாப்பிடலாமுன்னு கூட்டிட்டு போனாங்க. நாங்க ஓடி வந்த பின்னாடி அவங்க ஒரு தோப்புல நொழஞ்சி எளநீ வெட்டிட்டு வந்துட்டாங்க, நாங்களும் ஜாலியா சாப்பிட்டோம்.

வெள்ளெலி வேட்டை இத்தனை கஷ்டமான்னு நினைச்சா, செல மக்க செலவே இல்லாமல் எலி புடிச்சாங்க அது எப்படின்னு அடுத்த வாட்டி சொல்லுறேன்.

11 Comments:

At 3:36 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நடத்துங்க. அடுத்த பகுதிக்கு காத்துக்கிட்டு இருக்கோம்.

 
At 4:52 AM, Blogger மகேஸ் said...

எங்களோட பேவரைட் நண்டு, மீன்கள் மற்றும் முயல் பிடிப்பது தான். போன பதிவில் நீங்கள் பட்டுப்பூச்சியைப் பத்திச் சொல்லி என் தாத்தா வீட்டை ஞாபகப்படுத்தீட்டீங்க.

கிராமத்து வாழ்க்கை மிகவும் ரம்யமானதுதான். வருங்காலத்தில் என் பிள்ளைகள் இந்தச் சுகானுபவங்களை அனுபவிக்க முடியாது.

நல்ல கோடைகாலத்தில் ஆற்றங்கரையோரம் இருக்கும் காய்ந்த கருவேல மரங்களுக்கெல்லாம் தீ வைத்து விட்டு வந்துவிடுவோம். மரத்தை வெட்டிப் போட்டவர் அடிப்தற்கு துரத்திக் கொண்டே வருவார்.

குரங்குச் சேட்டைகளையெல்லாம் ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.

 
At 4:53 AM, Blogger மகேஸ் said...

கொத்தனாரே, நீங்களுன் என்னய மாதிரி பல சேட்டைகள் செஞ்சி வளந்தவர்தானா

 
At 6:15 AM, Blogger rnateshan. said...

தம்பி பரஞ்சோதி,
சுத்த சைவமான என்னை இப்படி அசைவத்தை படிக்க வச்சுட்டிங்களே!எங்கள் தொழிற்சாலையில் வெள்ளை எலிகளை ஒருவர் பிடித்துவிட்டார்!!அவரிடம் சண்டையிட்டு வெளியே விடவைத்தேன்!!!
பரவாயில்லை!!படிப்பதானால் ஒன்றும் ஆகிவிடாது!
படிப்பதற்கு சுவையாக இருந்தது !!!!!

 
At 1:25 PM, Blogger Ram.K said...

நான் சினிமா என்று நினைத்து வந்தேன்.

:)

தங்களை அழைத்திருக்கிறேன்.
http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_20.html

பார்க்கவும்.

 
At 10:40 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நானும் ஒரு ஆறு பதிவு போட்டாச்சு.

நான் கூப்பிட்ட ஆறு பேரில் நீங்களும் உண்டு. வந்து பாருங்க. உங்க பதிவையும் போடுங்க.

 
At 11:17 PM, Blogger பரஞ்சோதி said...

இலவசத்தாரே!

கொஞ்சம் வேலை இருக்குது, அதான் இணையம் பக்கம் அதிகம் வரமுடியவில்லை. விரைவில் அடுத்த பாகம் வரும்.

 
At 11:19 PM, Blogger பரஞ்சோதி said...

வாங்க மகேஸ்

முன்னமே பதில் சொல்ல நினைத்தேன், மறந்துட்டேன்.

ஆமாம் உங்களுக்கு எந்த ஊரு. பட்டுப்பூச்சி உங்க ஊரிலேயும் விழுமா?

நான் செஞ்ச சேட்டைகள் எக்கசக்கம், நீங்களும் உங்க சேட்டைகள் தனியாக சொல்லலாமே.

 
At 11:19 PM, Blogger பரஞ்சோதி said...

ராம் சார்,

அழைப்புக்கு மிக்க நன்றி. விரைவில் என் பதிவை சொல்கிறேன்.

 
At 1:30 PM, Blogger Sandra White said...

phentermine - health insurance - debt consolidation - home equity loans Nice comment.. I ll come back for sure :]

 
At 1:30 PM, Blogger Sandra White said...

phentermine - health insurance - debt consolidation - home equity loans Nice comment.. I ll come back for sure :]

 

Post a Comment

<< Home