Monday, February 12, 2007

மாமனிதர் சாகரனும் நானும்

(என்னுயிர் தோழனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்)


நேற்றிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன் அடித்தது, சில நேரம் அதை கண்டுக்காமல் விட்டு விடுவேன், ஆனால் ரிங் டோன் அடித்து அடித்து கட் ஆன விதம் எனக்கு ஏதோ போல் இருந்தது.

போனில் தொடர்பு கொண்டவர் முத்தமிழ் மன்ற குமரன், “அண்ணா! ஒரு அதிர்ச்சி செய்தி, தமிழ்மணத்தில் நம்ம சாகரன் அண்ணா பற்றிய கெட்ட செய்தி, அவர் மறைவு என்று பதிவு இருக்குது, நம்ம கிரியும் அதை பார்த்து உடனே உங்களிடம் உடனே சொல்லச் சொன்னார்” என்றார்.

அந்த ஒரு நொடியில் என் மூச்சே நின்று போனது, கடவுளே! இது பொய்ச்செய்தியாக இருக்கட்டும், ஏதோ தவறான தகவலாக இருக்கட்டும் என்று இணையத்தில் தமிழ்மணம் பார்த்தேன், பதிவை போட்டவர்கள் மதியும், சிபியும், இருவரும் எதையும் ஆராயாமல் போடுபவர்கள் அல்ல, இருந்தாலும் மனதுக்குள் ஒரு எண்ணம், இது தவறாக தகவல் தான் என்று நினைத்து, சாகரனின் சவுதி அரேபியா தொலைபேசிகளுக்கு அழைத்தேன், ஆனால் போகவில்லை. ஒரே படபடப்பு, என்ன செய்வது என்று தெரியவில்லை, கண்களில் நீர் வழிகிறது, இருந்தாலும் இறைவா! நீ நினைத்தால் எதையும் எப்போவும் மாற்ற முடியும், இச்செய்தி பொய்யான செய்தியாக இருக்கட்டும் என்று வேண்டினேன்.

பின்னர் முன்பு சாகரன் கொடுத்த ரியாத் தமிழ்ச்சங்கம் வலைத்தளம் போய் பார்த்தேன், அது பல மாதங்களாக மாற்றப்பட வில்லை, யாருடைய தொலைபேசியாவது கிடைக்குமான்னு பார்த்தேன், கிடைக்கவில்லை.

பின்னர் யாகூ குருப் போனால், அங்கே இம்தியாஸ் என்பவர் போட்ட பதிவை படித்து மனம் உடைந்து போனேன்.

உடனே கிரிக்கு சொன்னேன், கத்தார் இக்பால் அண்ணாவுக்கு தொடர்பு கொண்டேன், அவரும் தூங்கிவிட்டார் போல், லைன் எடுக்கலை. என்ன செய்வது என்று புரியவில்லை. கிரியும் ரொம்ப நேரம் பேசி, மீண்டும் தமிழ்மணம் பார்த்தேன், ஒவ்வொருவராக உறுதி செய்வது போல் பதிவுகள் வர, உடனே கிரியிடம் சொல்லி, முத்தமிழ் மன்றத்தில் அறிவிப்பு கொடுக்கச் சொன்னேன், இரவு முழுவதும் தூக்கமில்லை, படுத்தால் மனப்பாரம் அதிகமாகிக் கொண்டே இருக்க, விடியற்காலை வரை விழித்திருந்தேன்.

தொடர்ந்து அவரைப் பற்றி நினைக்க நினைக்க மனம் பாரமாகிறது, கண்களில் நீர் வழிகிறது. எத்தனை அருமையான மனிதர், எங்கே தேடினும் அவரைப் போல் ஒருவர் இனி கிடைக்க மாட்டார்.

நானும் சாகரனும் பழகிய நாட்கள் இனிமையான நாட்கள், அந்த இனிமையான நாட்களை பகிர்ந்து கொண்டால் தான் என் மனப்பாரம் குறையும்.

சாகரன் என்ற கல்யாண் எனக்கு தமிழ்மன்றத்தில் தான் பழக்கம் ஆனார். நான் அங்கே குழந்தைகளுக்கு கதை சொல்வது பரஞ்சோதி மாமா என்ற தலைப்பு தொடங்கிய போது, மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளின் பெயர்களை கேட்டு, அவர்கள் அக்கதைகளில் வரும்படியாக செய்தேன், அப்போ தான் எனக்கு வர்ணிகா பழக்கம் ஆனார், சாகரன் மற்றும் சகோதரி எங்க உறவானார்கள்.

வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பு தொடங்கிய போது சாகரன் சவுதி அரேபியா செய்திகள் அதிகம் கொடுத்தார். சாகரன் என்ற பெயர் ஏன் என்று கேட்டதற்கு சாகரம் போல் எல்லை இல்லாமல் பரந்து விரிய வேண்டும், அழிவு என்பதே இல்லாததாக இருக்கவேண்டும் என்றார்.

கால இயந்திரம் என்ற டைம் மெஷின் பற்றிய கதை எழுதிய போது அதில் அவர் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் பாத்திரமாக வர ஆசைப்பட்டார், அதை வைத்து கதை எழுதவும் என்னிடம் சொன்னார். அவர் வந்திய தேவனாக மாறி வீர நாராயண ஏரி ஓரமாக குதிரையில் போகும் காட்சியை ரசனையாக சொன்னார்.

பின்னர் அடிக்கடி தொலைபேசியில் அழைப்பார், அப்போ என் மகள் சக்தி பிறக்கவில்லை, வர்ணிகாவை பற்றி அடிக்கடி சொல்வார், கை சூப்பும் பழக்கம் பற்றி சொல்வார், மகளின் ஒவ்வொரு செயலையும் என்னிடம் சொல்லி மகிழ்வார், நானும் அவருக்கு குழந்தை வளர்ப்பு விசயமாக தகவல்கள் கொடுப்பேன். “சுரேஷ்! உங்ககிட்ட நிறைய பேச ஆசையாக இருக்குது, ஆனால் தொலைபேசி கட்டணம் தான் தடுக்குது, நேரில் சந்தித்து இது பற்றி அதிகம் பேசுவோம்” என்று அடிக்கடி சொல்வார்.

சகோதரியும் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள், என் மனைவியோடும் பேசியிருக்காங்க. வர்ணிகா பேசுவதை கணினி வாயிலாக எனக்கு அனுப்பி வைப்பார், நானும் சாட் செய்யும் போது பேசியிருக்கிறேன்.

முத்தமிழ் மன்றம் தொடங்க நினைத்த கணமே தன் முழு ஆதரவையும் கொடுப்பதாக உறுதி கூறினார், அதற்காக தினமும் போன் செய்து பேசினார், இரண்டே நாட்களில் முத்தமிழ் மன்றம் அவருடைய அயராத உழைப்பில் உருவானது. முத்தமிழ் மன்றம் தொடங்கும் முன்பு அவரது பாலகுமாரன் விவாதக்களம் தொடங்கிய போதும் என்னை வழிநடத்துநராக இருக்க சொன்னார், நான் அதில் இருந்த குறைகளை சுட்டிக் காட்டி அதை எல்லாம் சரி செய்தார். பின்னர் பாலகுமாரன் நாவல்கள் அதிகம் படிக்காததால் என்னால் அங்கே தொடர்ந்து பதிவுகள் போட முடியவில்லை, அப்போவும் “சுரேஷ், சும்மாவாக்கும் எட்டி பாருங்க, நான் விரைவில் பாலகுமாரன் நாவல்கள் இணையம் வழியாக அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்பார்.

முத்தமிழ் மன்றம் தொடங்கிய காலக்கட்டத்தில் அவருடான நட்பு மேலும் கூடியது. வர்ணிகாவுக்காக நான் கார்ட்டூன், கணினி விளையாட்டு, பாடங்கள் அடங்கிய சிடிகளை அனுப்பி வைத்து மகிழ வைத்தேன், இன்னும் இருப்பதை நேரில் பார்க்கும் போது கொடுக்கிறேன் என்று சொல்லி வந்தேன்.

நிலா சகோதரி நடத்திய குழந்தைகளுக்கான போட்டிகளில் பரிசு வழங்க ஒத்துக் கொண்ட போது, பணம் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் விழித்த போது, கை கொடுத்தவர் சாகரன் தான், நான் இன்னும் அவருக்கு கடனாளியாகவே இருக்கிறேன், எத்தனையோ முறை கொடுக்க முனைந்த போதும், “சுரேஷ் நேரில் சந்திக்கும் போது கொடுங்க, ஒன்றும் அவசரம் இல்லை, இந்த ஆண்டு எப்படியும் நாம் சென்னையில் சந்திக்கலாம்” என்றார்.

அய்யோ கடவுளே! ஏன் இப்படி சதி செய்தாய், அவர் என்ன பாவம் செய்தார்.

அவருடன் பேசும் போதெல்லாம் ஏதோ ஒரு மகானிடம் பேசுவது போலிருக்கும், அநாவசியமான சொற்கள், செயல்கள் எதையும் அவரிடமிருந்து வராது, எப்போ பார்த்தாலும் “எதையாவது சாதிக்கணும் சுரேஷ், அதுவும் பெரிய அளவில் இருக்கணும், இப்போ நம் முகம் காட்டக்கூடாது, யார் அது யார் அது என்று தேடும் நிலையில் நாம் முகம் காட்டணும்” என்று குழந்தை போல் சொல்வார், பேச்சில் அத்தனை ஆர்வமும், உண்மையும் இருக்கும்.

“இன்று எல்லோரும் யார் சாகரன், யார் கல்யாண், எப்படி இருப்பார் என்று கேட்கிறார்கள் நண்பா! உன் முகத்தை காட்டு நண்பா”

சென்னை வலைப்பதிவாளர்கள் கூட்டத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதை கூட அவர் சொன்னார், அது ரொம்பவும் எதார்ச்சையாக நடந்ததாகவும், ரொம்பவும் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.

தேன் கூடு தொடங்கிய போது, தனியொருவராக அதற்காக இரவு பகலாக கடுமையாக உழைத்தார், இது யாருக்கும் போட்டியாக இருக்காது, தனித்தன்மையோடு விளங்கும் என்று அடிக்கடி சொல்வார்.

அவரது மற்றும் என்னுடைய நீண்ட நாள் கனவாக குழந்தைகள் தளம், ஆம் தமிழிலில் குழந்தைகளுக்கான அனைத்து விசயங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் தளம் ஒன்றை அமைக்க நாங்க இருவரும் திட்டமிட்டோம். நான் அவரை தொடர்ந்து அதற்காக உழைக்குமாறு கேட்டுக் கொண்டேன், வாண்டு.காம் என்ற பெயரையும் அவர் ரிஜிஸ்டர் செய்து வைத்தார்.

சென்னை சென்ற போது நண்பர்களிடம் அது பற்றி பேசியும் இருந்தேன், ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து வேலைகள் அதிகமாகவும், சாகரனும் தேன் கூடு மற்றும் அலுவலக பணியில் மும்மரமாக இறங்க, இருவரும் அதை வரும் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப் போட்டோம். வாண்டு.காம் தளத்திற்காக நிறைய மென் பொருட்களையும், பிளாஷ் விளையாடுகளையும் வாங்கி வருவதாக சொன்னார்.

நான் கடைசியாக அவரிடம் பேசியது 6ந்தேதி, அன்று அவரிடம் நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு கவிதைப் போட்டியின் விபரத்தை தேன் கூட்டின் முகப்பில் தெரியப்படுத்துங்க என்றேன், அவரும் உடனே செய்கிறேன் என்றார்.

அடுத்த நாள் பார்த்தவுடன் அவருக்கு நன்றி சொல்ல நினைத்தேன், பின்னர் அப்படியே தள்ளி போய் விட்டது, அவரும் என்னை, நம்மை எல்லாம் பிரிந்து ரொம்ப தூரம், இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்.

இனிமேல் எனக்கு சாகரன் போல் ஒரு முகம் தெரியாத நண்பர் கிடைப்பாரா என்று தெரியவில்லை. சகோதரியும் மருமகள் வர்ணிகாவையும் எப்படி காண்பேன், நேரில் பார்க்கும் போது எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லை.

காலதேவனின் கொடிய செயலால் என் நண்பனை இழந்துவிட்டேன். சாகரன் ஒரு மகான், வாழும் விவேகானந்தராக அவரை கண்டேன். பாரதி, கணித மேதை இராமானுஜம், மாவீரன் பகத்சிங் போன்றவர்களை எல்லாம் இளம் வயதில் தன்னிடம் அழைத்துக் கொண்ட இறைவன், என் நண்பரையும் அழைத்துக் கொண்டது இறைவனின் சுயநலமிக்க கொடிய செயலாகவே நான் கருதுகிறேன்.

தமிழ் இணையத்தில் தனக்கு என்று ஒரு மகத்தான இடத்தை அடைய நினைத்த என் தோழனின் பயணம் கால்வாசி தூரம் கூட இல்லை என்றாலும், நம் அனைவரின் மனதிலும், தமிழ் தாயின் இதயத்திலும் என்றும் நீங்காத அளவுக்கு சாதித்து சென்றிருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Labels:

20 Comments:

At 3:28 AM, Blogger முத்துலெட்சுமி said...

என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு அவரைப் பற்றிய விஷயங்கள் தெரியாது இருந்த போதும் இங்கு எல்லாரும் அவரை ப் பற்றிய பதிவுகள் இடும்போது படிக்க படிக்கக்
கண்கள் குளமாகின்றன்.எத்தனை கனவுகள் இந்த இளைஞருக்குள், இறைவா கருணையே இல்லையா ?

 
At 7:27 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப சோகமான நிகழ்வு. மனசு கேக்கல இன்னும்.
:((

ஆழ்ந்த அனுதாபங்களை அவர் குடும்பத்துக்கு தெரிவியுங்கள்.

 
At 7:27 AM, Blogger Nepolian said...

நமக்கு எல்லாம் பெரிய இழப்பு பரஞ்சோதி. அவர் விட்டு சென்ற பணிகளை நாம் அனைவரும் கை கோர்த்து நடத்துவதே இப்போது தேவையான ஒன்று.
அடுத்தது

அவரின் குடும்பம் பாரதி குடும்பம் போன்று பொருளாதார சிக்கலில் மாட்ட கூடாது. தமிழ் வலைபூக்களில் இருக்கும் பலர் உதவினால் அந்த முகம் தெரியாத சகோதரிக்கும் அந்த பிஞ்சிக்கும் வாழ்க்கை செழிக்க வழி வகுக்கலாம்

என்னால் முடிந்த வரை உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.ஆனால் யாராவது ஒருவராது இந்த செயலை முன் எடுத்து செய்ய வேண்டும். அது நீங்களாக இருக்கட்டும் அல்லது வேறு யாராவது இருக்கட்டும்.யாராவது முன் நின்று பாடு படவேண்டும்
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒருவரின் குடும்பம் கடினபடகூடாது

 
At 7:33 AM, Blogger பரஞ்சோதி said...

//எத்தனை கனவுகள் இந்த இளைஞருக்குள், இறைவா கருணையே இல்லையா ?//

உண்மை தான் சகோதரி!

இறைவனுக்கு சில நேரங்களில் கருணையே இல்லை என்று நினைப்பதுண்டு அது எப்போ என்றால் பச்சிளம் குழந்தைகள் உயிரை எடுக்கும் போது, அதே நிலை தான் இப்போ சாகரனின் உயிரை பறிக்கும் போது, இறைவனை தண்டிக்க யாருமில்லையே.

இறைவன் வேண்டும் என்றால் தன் மகனை தன்னிடம் அழைத்துக் கொள்ளலாம், ஆனால் சாகரனின் குழந்தைக்கு யார் பதில் சொல்வார்கள், இனி வரும் காலங்களில் அக்குழந்தையின் கண்ணீருக்கு இறைவன் பதில் சொல்லியே தீர வேண்டும்.

 
At 7:35 AM, Blogger பரஞ்சோதி said...

சிறில், நானே யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன், முத்தமிழ் மன்ற நண்பர்கள் சாகரன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள், பெரியவங்க ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க.

 
At 7:36 AM, Blogger பரஞ்சோதி said...

அன்பு நெப்போலியன்,

உங்க அன்பு மனம் என்னை நெகிழ வைக்கிறது. நண்பர் பாலராஜன் கீதாவிடம் இது பற்றி பேசலாம். அவரால் எல்லோருக்கும் இவ்விசயத்தில்ல் உதவ முடியும்.

 
At 7:42 AM, Blogger SK said...

நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் அறிமுகம் கிடையாது அவருடன்!
இருப்பினும் மனது மிகவும் கஷ்டப்படுகிறது, செய்தி கேட்டு.
ஈடு செய்ய முடியாத இழப்பு, ஆற்றவொண்ணா பேரிடி என்றெல்லாம் சொற்சிலம்பம் செய்துவிட்டு, பின்னர் அவரவர் வேலையைக் கவனிக்கப் போய்விடாமல், எதேனும் ஆக்க பூர்வ முயற்சிகளுக்கு என்னுடைய ஒத்துழைப்பு முழு அளவில் உண்டு எனச் சொல்லி முடிக்கிறேன்.
அவரது குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

முருகனருள் முன்னிற்கும்.

 
At 7:53 AM, Blogger ஜீவன் said...

நான் சாகரன் அவர்களின் சாதனைகளைப் பற்றி , இப்போது தான் கேள்விப்படுகிறேன்..
அவரது மறைவு மிகவும் வேதனையான செய்தி..
என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
At 7:58 AM, Blogger icarus prakash said...

சென்ற மாதம் சென்னை வந்திருந்த போது, சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தங்களைப் பற்றிச் சொன்னார்.. அந்த ஒரு நாள் சந்தித்ததிலும், மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டதிலுமே இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றால், நெருங்கிப் பழகிய உங்களைப் போன்றவர்களுக்கு, அவரது இழப்பு எவ்வளவு என்று புரிந்து கொள்ள முடிகிறது.. அது மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், அவருடன் படித்தவர்கள், அவரை நகமும் சதையுமாக நன்கு அறிந்தவர்கள், உடன் வேலை செய்தவர்கள் போன்றவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு? நினைக்கவே ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

நண்பர்கள் சொன்னது போல, சாகரனின் நினைவாக நாம் ஏதேனும் செய்தே ஆகவேண்டும். எதுவாக ருந்தாலும், என்னையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

 
At 8:05 AM, Blogger SK said...

திரு. கல்யாணின் நினைவினைப் போற்றும் வகையில் ஒரு 24 மணி நேரத்திற்கு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளைத் தவிர மற்றெந்தப் பதிவையும் அனுமதிக்காமல் அவருக்கு மரியாதை "தேன்கூடும், தமிழ்மணமும்" செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்!
நன்றி.

 
At 8:23 AM, Blogger We The People said...

//அவரின் குடும்பம் பாரதி குடும்பம் போன்று பொருளாதார சிக்கலில் மாட்ட கூடாது. தமிழ் வலைபூக்களில் இருக்கும் பலர் உதவினால் அந்த முகம் தெரியாத சகோதரிக்கும் அந்த பிஞ்சிக்கும் வாழ்க்கை செழிக்க வழி வகுக்கலாம்//

//நண்பர்கள் சொன்னது போல, சாகரனின் நினைவாக நாம் ஏதேனும் செய்தே ஆகவேண்டும். எதுவாக ருந்தாலும், என்னையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.//

நானும் வழிமொழிகிறேன்! இதை கண்டிப்பா செய்யவேண்டும்! பலன் எதிர்பாராமல் அவர் செய்த தமிழ் சேவைக்கு நம்மால் ஆனதை செய்வோம்! நான் நன்பர் பாலபாரதியிடம் நம் வலைப்பதிவர்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த போகலாம் என்று, அப்பொழுது இதை பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறேன். உங்க கருத்துக்களை முன்வைக்கவும்!

நன்றி

ஜெயசங்கர் நா

 
At 9:17 AM, Blogger ஸதக்கத்துல்லாஹ் said...

சாகரனைப் பற்றி நண்பர்கள் வாயிலாகவும், வலைப்பூக்கள் வழியாகவும் நிறையத் தெரிந்து கொண்டேன். அவரைச் சந்தித்து அளவளாவ வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தது. இறைவன் அவையில் அவருக்குரிய அலுவல் அதிகமிருப்பதால் அவன் சீக்கிரம் அழைத்துக் கொண்டானோ? செய்தி கேட்ட கணத்திலிருந்து அலுவலில் கவனம் செல்லவில்லை. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

 
At 9:30 AM, Blogger பாலராஜன்கீதா said...

என் மின்னஞ்சல் முகவரி - balarajangeetha at gmail dot com

 
At 10:58 AM, Blogger நண்பன் said...

பரஞ்சோதி,

நான் அவருக்கு இன்னமும் கடனாளியாகவே இருக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள் - உங்களைப் போலவே மற்றொரு கடனாளியாகவே நானும், மற்ற துவக்கு நண்பர்களும் உள்ளனர். துவக்கு.காம் என்றொரு தளத்தை உருவாக்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்ட பொழுது, நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்பதானால், உடன் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து ஒரு மாதத்திற்குள்ளாக தயார் செய்து கொடுத்தார் - பின்னர் அவரிடம் தொலைபேசி செலவு எத்தனை ஆயிற்று, எப்படி திருப்பித் தருவது என்றெல்லாம் கேட்ட பொழுது, அதற்கென்ன, நண்பன், அவசரம் - எப்பொழுதாவது சந்திக்கும் பொழுது வாங்கிக் கொள்கிறேனே என்று சொல்லி தட்டிக் கழித்து விட்டார். இத்தனை விரைவாக அவர் சந்திக்க முடியாத இடத்திற்குச் சென்று விடுவார் என்று நினைக்கவே இல்லை.

நேற்று இரவு, வலைப்பூவில், தமிழ்மண லோகோவை இணைப்பதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்த பொழுது, இரவு 12 மணிக்கு, அப்பொழுது தான் அறைக்குத் திரும்பிய, முத்துகுமரன், சாகரன் இறந்து விட்டார் தெரியுமா என்ற கேள்வியுடன் தான் அறைக்கதவையே திறந்தார். முதலில், ஏதோ தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இறந்து விட்டார் என்ற தகவலைத் தான் தருகிறார் என்ற நினைப்பில், யார் அவர்? என்று தான் கேட்டேன். பின்னர் தான் அவர் சொன்னார், நமக்கு துவக்கு.காம் உருவாக்கித் தந்த சாகரன் - தமிழ் மன்ற நண்பர் என்று சொன்னதும் தான், மதிகந்தசாமியின் பதிவைப் படித்தேன். நம்ப முடியவில்லை.

அவருடைய மரணம் நம்பமுடியாதது போலவே, அளவற்ற அச்சத்தையும் விதைத்து சென்றிருக்கிறது என்றும் சொல்லலாம். இன்று மீண்டும், அலுவலகத்தில் இருந்து திரும்பும் வழியில், முத்து குமரனுடன் பேசிக் கொண்டே வரும் பொழுது, மீண்டும் சாகரனைப் பற்றிய விவாதம் தான். புகைப் பழக்கம் இல்லாதவர், அசைவ உணவுகள் சாப்பிடாதவர், இளம் வயது - ஒரு மாரடைப்பை எதிர்பார்க்கும் எந்த ஒரு சாத்தியக் கூறும் இல்லாத ஒரு வாழ்க்கையே இத்தனை அதிர்ச்சியுடன், இறைவனால் முடித்து வைக்க முடியுமென்றால், இவை மற்றும் இன்ன பிற பழக்கங்களும் உள்ள மற்றவர்களின் கதி என்ன? ஏனோ, நம்மை இவையெல்லாம் அண்டாது என்ற ஒரு மமதையுடன் வாழ்வதாகவே படுகிறது. ஆனால், இவையெல்லாவற்றையும் விட, நம்மை மீறிய ஒரு சக்தியால், நம்மை நாம் அறியாமலே முற்றிலுமாக துடைத்தெறிந்து விட முடியும் என்ற உண்மை முகத்தில் அறைந்தாற் போன்று உரைக்கிறது.

ஒருவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை வாழ்ந்து கழிக்க வேண்டிய, உற்ற உறவினர்களுக்குத் தான் அதன் துயரமும் தாக்கமும் அதிகமாக இருக்கும். அத்துடன், விட்டுப் போன பொறுப்புகளும், கூட இருந்தால், அதன் துயரம் அதிகமாகவே இருக்கும். இந்த வெற்றிடங்களையும், துயரங்களையும் அனுபவித்தவன் என்பதினாலே, நண்பர் சாகரனின் மறைவு இன்னமும் அதிக தாக்குதலை ஏற்படுத்துகிறது.

அவரது குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்வதில் நானும் இணைந்து கொள்கிறேன் - அத்துடன், அவரது குடும்பத்தாருக்கு, உதவியாக ஏதேனும் செய்யும் பொழுது, கண்டிப்பாக என்னையும் அழைத்துச் சொல்லுங்கள். இது உதவி அல்ல - நீங்கள் கூறியது போல, கடன் தீர்க்கும் பணி மட்டுமே.

உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறோம்.

அன்புடன்
நண்பன்

 
At 12:27 PM, Blogger துளசி கோபால் said...

////நண்பர்கள் சொன்னது போல, சாகரனின் நினைவாக நாம் ஏதேனும்
செய்தே ஆகவேண்டும். எதுவாக ருந்தாலும், என்னையும் கணக்கில்
எடுத்துக் கொள்ளுங்கள்.//

என்னையும் கணக்கில் எடுக்கணும்.

மனித வாழ்க்கைன்றது எவ்வளவு அநித்தியமானதுன்னு நம்ம பதிவர்கள் அனைவருக்கும்
கண்கூடாக நேத்து உணர்ந்திருப்பாங்க.

இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்.

 
At 12:29 PM, Blogger SK said...

திரு. கல்யாண் அவர்களின் ஆன்மா சாந்தியடைய முருகனை வேண்டுகிறேன்.
அவரது குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வரும் புதனன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவர் இல்லத்தில் ஈமக்கிரியை நடைபெற இருப்பதாக முத்தமிழ்மன்றத்தில் படித்தேன்.
முடிந்த அன்பர்கள் போய் அஞ்சலி செலுத்தினால் எங்களைப் போன்ற இயலாதவர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும்.

முருகனருள் முன்னிற்கும்.

 
At 2:33 PM, Blogger நிலா said...

பரஞ்சோதி,

எனக்குக் கல்யாணைத் தேன்கூடு போட்டிகளின் போதுதான் பரிச்சயம். போட்டியில் சில மாறுதல்களுக்கான யோசனைகளை முன்வைத்தபோது திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டார். பெயர் தராமல் தேன்கூடு குழு என்றே மடல் அனுப்பிக் கொண்டிருந்தார். பெயரில்லாமல் கம்யூனிகேட் செய்ய ஏதோ போலிருக்கிறது என்று நான் எழுதிய பின் மிகுந்த தயக்கத்தோடு அவர் பெயரைத் தந்தார்; குழுவினரின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின் அவ்வப்போது தேவையான தருணத்தில் மட்டும் மின்னஞ்சல்கள் பறிமாறிக் கொண்டாலும் எல்லோரும் சொல்வது போல ஒரு மிகப் பழகிய மனிதர் போலவே தோன்றினார். நிலாச்சாரலில் செய்தியோடை இல்லை எனத் தெரிந்து தானே முன்வந்து உதவினார்.

ஒருவரின் எழுத்திலிருந்து ஓரளவு வயதினைக் கண்டுபிடிக்க முடியுமே! - ஆனால் அவரது மெச்சூரிடியை வைத்து அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். அவ்வளவு எளிமை, முதிர்ச்சி.

அவர் இந்தியாவில் இருக்கிறார் என்றே எண்ணியிருந்தேன். ஏப்ரலில் ஊருக்குச் செல்லும் போது பார்க்கவேண்டிய பட்டியலில் அவரும் இருந்தார்!

பேரதிர்ச்சியாக இருக்கிறது...

 
At 10:49 PM, Blogger Mathuraiampathi said...

என்னைப்போன்றவர்களுக்கு அவரைப்பற்றி தெரியாதென்றாலும், பலரது பதிவுகளைப்பார்க்கும் போது, அவரது பறந்த உள்ளம் தெரியவருகிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்...

 
At 5:24 AM, Blogger Deepa J said...

Deal All,
Please visit the following URL for Sakaran's funeral rites schedules.

http://djanakiraman.googlepages.com

Thanks
Family

 
At 9:09 AM, Blogger AJeevan said...

சாகரனுக்கான சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே.....
http://ajeevan.blogspot.com/
or
http://radio.ajeevan.com/

 

Post a Comment

<< Home