(என்னுயிர் தோழனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்) நேற்றிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன் அடித்தது, சில நேரம் அதை கண்டுக்காமல் விட்டு விடுவேன், ஆனால் ரிங் டோன் அடித்து அடித்து கட் ஆன விதம் எனக்கு ஏதோ போல் இருந்தது.
போனில் தொடர்பு கொண்டவர் முத்தமிழ் மன்ற குமரன், “அண்ணா! ஒரு அதிர்ச்சி செய்தி, தமிழ்மணத்தில் நம்ம சாகரன் அண்ணா பற்றிய கெட்ட செய்தி, அவர் மறைவு என்று பதிவு இருக்குது, நம்ம கிரியும் அதை பார்த்து உடனே உங்களிடம் உடனே சொல்லச் சொன்னார்” என்றார்.
அந்த ஒரு நொடியில் என் மூச்சே நின்று போனது, கடவுளே! இது பொய்ச்செய்தியாக இருக்கட்டும், ஏதோ தவறான தகவலாக இருக்கட்டும் என்று இணையத்தில் தமிழ்மணம் பார்த்தேன், பதிவை போட்டவர்கள் மதியும், சிபியும், இருவரும் எதையும் ஆராயாமல் போடுபவர்கள் அல்ல, இருந்தாலும் மனதுக்குள் ஒரு எண்ணம், இது தவறாக தகவல் தான் என்று நினைத்து, சாகரனின் சவுதி அரேபியா தொலைபேசிகளுக்கு அழைத்தேன், ஆனால் போகவில்லை. ஒரே படபடப்பு, என்ன செய்வது என்று தெரியவில்லை, கண்களில் நீர் வழிகிறது, இருந்தாலும் இறைவா! நீ நினைத்தால் எதையும் எப்போவும் மாற்ற முடியும், இச்செய்தி பொய்யான செய்தியாக இருக்கட்டும் என்று வேண்டினேன்.
பின்னர் முன்பு சாகரன் கொடுத்த ரியாத் தமிழ்ச்சங்கம் வலைத்தளம் போய் பார்த்தேன், அது பல மாதங்களாக மாற்றப்பட வில்லை, யாருடைய தொலைபேசியாவது கிடைக்குமான்னு பார்த்தேன், கிடைக்கவில்லை.
பின்னர் யாகூ குருப் போனால், அங்கே இம்தியாஸ் என்பவர் போட்ட பதிவை படித்து மனம் உடைந்து போனேன்.
உடனே கிரிக்கு சொன்னேன், கத்தார் இக்பால் அண்ணாவுக்கு தொடர்பு கொண்டேன், அவரும் தூங்கிவிட்டார் போல், லைன் எடுக்கலை. என்ன செய்வது என்று புரியவில்லை. கிரியும் ரொம்ப நேரம் பேசி, மீண்டும் தமிழ்மணம் பார்த்தேன், ஒவ்வொருவராக உறுதி செய்வது போல் பதிவுகள் வர, உடனே கிரியிடம் சொல்லி, முத்தமிழ் மன்றத்தில் அறிவிப்பு கொடுக்கச் சொன்னேன், இரவு முழுவதும் தூக்கமில்லை, படுத்தால் மனப்பாரம் அதிகமாகிக் கொண்டே இருக்க, விடியற்காலை வரை விழித்திருந்தேன்.
தொடர்ந்து அவரைப் பற்றி நினைக்க நினைக்க மனம் பாரமாகிறது, கண்களில் நீர் வழிகிறது. எத்தனை அருமையான மனிதர், எங்கே தேடினும் அவரைப் போல் ஒருவர் இனி கிடைக்க மாட்டார்.
நானும் சாகரனும் பழகிய நாட்கள் இனிமையான நாட்கள், அந்த இனிமையான நாட்களை பகிர்ந்து கொண்டால் தான் என் மனப்பாரம் குறையும்.
சாகரன் என்ற கல்யாண் எனக்கு தமிழ்மன்றத்தில் தான் பழக்கம் ஆனார். நான் அங்கே குழந்தைகளுக்கு கதை சொல்வது பரஞ்சோதி மாமா என்ற தலைப்பு தொடங்கிய போது, மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளின் பெயர்களை கேட்டு, அவர்கள் அக்கதைகளில் வரும்படியாக செய்தேன், அப்போ தான் எனக்கு வர்ணிகா பழக்கம் ஆனார், சாகரன் மற்றும் சகோதரி எங்க உறவானார்கள்.
வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பு தொடங்கிய போது சாகரன் சவுதி அரேபியா செய்திகள் அதிகம் கொடுத்தார். சாகரன் என்ற பெயர் ஏன் என்று கேட்டதற்கு சாகரம் போல் எல்லை இல்லாமல் பரந்து விரிய வேண்டும், அழிவு என்பதே இல்லாததாக இருக்கவேண்டும் என்றார்.
கால இயந்திரம் என்ற டைம் மெஷின் பற்றிய கதை எழுதிய போது அதில் அவர் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் பாத்திரமாக வர ஆசைப்பட்டார், அதை வைத்து கதை எழுதவும் என்னிடம் சொன்னார். அவர் வந்திய தேவனாக மாறி வீர நாராயண ஏரி ஓரமாக குதிரையில் போகும் காட்சியை ரசனையாக சொன்னார்.
பின்னர் அடிக்கடி தொலைபேசியில் அழைப்பார், அப்போ என் மகள் சக்தி பிறக்கவில்லை, வர்ணிகாவை பற்றி அடிக்கடி சொல்வார், கை சூப்பும் பழக்கம் பற்றி சொல்வார், மகளின் ஒவ்வொரு செயலையும் என்னிடம் சொல்லி மகிழ்வார், நானும் அவருக்கு குழந்தை வளர்ப்பு விசயமாக தகவல்கள் கொடுப்பேன். “சுரேஷ்! உங்ககிட்ட நிறைய பேச ஆசையாக இருக்குது, ஆனால் தொலைபேசி கட்டணம் தான் தடுக்குது, நேரில் சந்தித்து இது பற்றி அதிகம் பேசுவோம்” என்று அடிக்கடி சொல்வார்.
சகோதரியும் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள், என் மனைவியோடும் பேசியிருக்காங்க. வர்ணிகா பேசுவதை கணினி வாயிலாக எனக்கு அனுப்பி வைப்பார், நானும் சாட் செய்யும் போது பேசியிருக்கிறேன்.
முத்தமிழ் மன்றம் தொடங்க நினைத்த கணமே தன் முழு ஆதரவையும் கொடுப்பதாக உறுதி கூறினார், அதற்காக தினமும் போன் செய்து பேசினார், இரண்டே நாட்களில் முத்தமிழ் மன்றம் அவருடைய அயராத உழைப்பில் உருவானது. முத்தமிழ் மன்றம் தொடங்கும் முன்பு அவரது பாலகுமாரன் விவாதக்களம் தொடங்கிய போதும் என்னை வழிநடத்துநராக இருக்க சொன்னார், நான் அதில் இருந்த குறைகளை சுட்டிக் காட்டி அதை எல்லாம் சரி செய்தார். பின்னர் பாலகுமாரன் நாவல்கள் அதிகம் படிக்காததால் என்னால் அங்கே தொடர்ந்து பதிவுகள் போட முடியவில்லை, அப்போவும் “சுரேஷ், சும்மாவாக்கும் எட்டி பாருங்க, நான் விரைவில் பாலகுமாரன் நாவல்கள் இணையம் வழியாக அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்பார்.
முத்தமிழ் மன்றம் தொடங்கிய காலக்கட்டத்தில் அவருடான நட்பு மேலும் கூடியது. வர்ணிகாவுக்காக நான் கார்ட்டூன், கணினி விளையாட்டு, பாடங்கள் அடங்கிய சிடிகளை அனுப்பி வைத்து மகிழ வைத்தேன், இன்னும் இருப்பதை நேரில் பார்க்கும் போது கொடுக்கிறேன் என்று சொல்லி வந்தேன்.
நிலா சகோதரி நடத்திய குழந்தைகளுக்கான போட்டிகளில் பரிசு வழங்க ஒத்துக் கொண்ட போது, பணம் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் விழித்த போது, கை கொடுத்தவர் சாகரன் தான், நான் இன்னும் அவருக்கு கடனாளியாகவே இருக்கிறேன், எத்தனையோ முறை கொடுக்க முனைந்த போதும், “சுரேஷ் நேரில் சந்திக்கும் போது கொடுங்க, ஒன்றும் அவசரம் இல்லை, இந்த ஆண்டு எப்படியும் நாம் சென்னையில் சந்திக்கலாம்” என்றார்.
அய்யோ கடவுளே! ஏன் இப்படி சதி செய்தாய், அவர் என்ன பாவம் செய்தார்.
அவருடன் பேசும் போதெல்லாம் ஏதோ ஒரு மகானிடம் பேசுவது போலிருக்கும், அநாவசியமான சொற்கள், செயல்கள் எதையும் அவரிடமிருந்து வராது, எப்போ பார்த்தாலும் “எதையாவது சாதிக்கணும் சுரேஷ், அதுவும் பெரிய அளவில் இருக்கணும், இப்போ நம் முகம் காட்டக்கூடாது, யார் அது யார் அது என்று தேடும் நிலையில் நாம் முகம் காட்டணும்” என்று குழந்தை போல் சொல்வார், பேச்சில் அத்தனை ஆர்வமும், உண்மையும் இருக்கும்.
“இன்று எல்லோரும் யார் சாகரன், யார் கல்யாண், எப்படி இருப்பார் என்று கேட்கிறார்கள் நண்பா! உன் முகத்தை காட்டு நண்பா”
சென்னை வலைப்பதிவாளர்கள் கூட்டத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதை கூட அவர் சொன்னார், அது ரொம்பவும் எதார்ச்சையாக நடந்ததாகவும், ரொம்பவும் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.
தேன் கூடு தொடங்கிய போது, தனியொருவராக அதற்காக இரவு பகலாக கடுமையாக உழைத்தார், இது யாருக்கும் போட்டியாக இருக்காது, தனித்தன்மையோடு விளங்கும் என்று அடிக்கடி சொல்வார்.
அவரது மற்றும் என்னுடைய நீண்ட நாள் கனவாக குழந்தைகள் தளம், ஆம் தமிழிலில் குழந்தைகளுக்கான அனைத்து விசயங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் தளம் ஒன்றை அமைக்க நாங்க இருவரும் திட்டமிட்டோம். நான் அவரை தொடர்ந்து அதற்காக உழைக்குமாறு கேட்டுக் கொண்டேன், வாண்டு.காம் என்ற பெயரையும் அவர் ரிஜிஸ்டர் செய்து வைத்தார்.
சென்னை சென்ற போது நண்பர்களிடம் அது பற்றி பேசியும் இருந்தேன், ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து வேலைகள் அதிகமாகவும், சாகரனும் தேன் கூடு மற்றும் அலுவலக பணியில் மும்மரமாக இறங்க, இருவரும் அதை வரும் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப் போட்டோம். வாண்டு.காம் தளத்திற்காக நிறைய மென் பொருட்களையும், பிளாஷ் விளையாடுகளையும் வாங்கி வருவதாக சொன்னார்.
நான் கடைசியாக அவரிடம் பேசியது 6ந்தேதி, அன்று அவரிடம் நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு கவிதைப் போட்டியின் விபரத்தை தேன் கூட்டின் முகப்பில் தெரியப்படுத்துங்க என்றேன், அவரும் உடனே செய்கிறேன் என்றார்.
அடுத்த நாள் பார்த்தவுடன் அவருக்கு நன்றி சொல்ல நினைத்தேன், பின்னர் அப்படியே தள்ளி போய் விட்டது, அவரும் என்னை, நம்மை எல்லாம் பிரிந்து ரொம்ப தூரம், இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்.
இனிமேல் எனக்கு சாகரன் போல் ஒரு முகம் தெரியாத நண்பர் கிடைப்பாரா என்று தெரியவில்லை. சகோதரியும் மருமகள் வர்ணிகாவையும் எப்படி காண்பேன், நேரில் பார்க்கும் போது எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லை.
காலதேவனின் கொடிய செயலால் என் நண்பனை இழந்துவிட்டேன். சாகரன் ஒரு மகான், வாழும் விவேகானந்தராக அவரை கண்டேன். பாரதி, கணித மேதை இராமானுஜம், மாவீரன் பகத்சிங் போன்றவர்களை எல்லாம் இளம் வயதில் தன்னிடம் அழைத்துக் கொண்ட இறைவன், என் நண்பரையும் அழைத்துக் கொண்டது இறைவனின் சுயநலமிக்க கொடிய செயலாகவே நான் கருதுகிறேன்.
தமிழ் இணையத்தில் தனக்கு என்று ஒரு மகத்தான இடத்தை அடைய நினைத்த என் தோழனின் பயணம் கால்வாசி தூரம் கூட இல்லை என்றாலும், நம் அனைவரின் மனதிலும், தமிழ் தாயின் இதயத்திலும் என்றும் நீங்காத அளவுக்கு சாதித்து சென்றிருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Labels: சாகரன்