Wednesday, March 08, 2006

நினைவலைகள் – கிரிக்கெட்-2006

நினைவலைகள் – கிரிக்கெட்-2006

நான் குவைத் வந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகுது, எக்கசக்கமான போட்டிகள் விளையாடி இருக்கிறேன், பலமுறை வெற்றிகள், பலமுறை தோல்விகள், கோப்பைகள், பதக்கங்கள், பரிசுகள், பலமுறை பிரச்சனைகள் சந்தித்திருக்கிறேன்.

2006ம் ஆண்டு என் வாழ்வில் மறக்கமுடியாத கிரிக்கெட் ஆண்டாக இருக்கும், காரணம் இதோ.

முதலில் எங்க கம்பெனி குவைத்திலேயே பெரிய கம்பெனி, குறைந்தது 15,000 பேர் வேலை செய்கிறார்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் அரபு, மற்றும் மேலைநாட்டவர்கள். கடந்த 5 ஆண்டுகளாக ரம்தான் மாதத்தில் கால்பந்து போட்டிகள் நடத்தி கோப்பைகள் வழங்குகிறார்கள், அதில் அரபு நாட்டவர்களே அதிகம் விளையாடி கோப்பையை தட்டிச் செல்வார்கள். நாங்களும் பலமுறை கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தச் சொல்லி கேட்டுப் பார்த்து வெறுத்து விட்டோம், காரணம் மேலிடத்தில் இருப்பவர்கள் அனைவரும் அரபுநாட்டைச் சேர்ந்தவர்கள், எங்க முதலாளியும் அரபுநாட்டவர், ஆனால் அவருக்கு கிரிக்கெட் மீது கொஞ்சம் விருப்பம் உண்டு, லண்டனில் படித்தவர் என்பதால்.

அதே நேரம், நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறோம், வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் காலையில் 8 மணி தொடங்கினால் 1 மணி வரை 15 ஓவர், 20 ஓவர் போட்டிகள் என்று இரண்டும், மாலையில் 3 மணிக்கு தொடங்கி ஒரு போட்டியும் நடக்கும். எங்க கம்பெனியின் ஆட்கள் தங்குமிடம் (Camp) அருகில் பல கம்பெனி ஆட்கள் தங்கியிருப்பதால் போட்டியிட எதிரணிக்கு பஞ்சமே இல்லை. சில நேரங்களில் 15 தினார் அல்லது 4 பெரிய பெப்சி குளிர்ப்பானம் போன்றவற்றை பந்தயமாக வைத்து விளையாடுவோம், அப்படி எதிரணியினர் வரவில்லை என்றால் எங்களுக்குள்ளே இரு அணியாக பிரித்து விளையாடுவோம். வெள்ளிக்கிழமை வந்தாலே வீட்டில் மனைவி முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார், காலையில் போனால் மாலையில் தான் வருகிறீங்க, சக்தியை யார் பார்த்துக் கொள்வார்கள், அவளையும் அழைத்துச் செல்லுங்க என்று ஒரே பாட்டு தான். வழக்கம் போல் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிடுவேன்.

சென்ற மாதம் அலுவலக்த்தில் இருக்கும் போது எனது தலைமை அலுவலக நண்பர் கோபால் போன் செய்து “சுரேஷ்! நான் ஒரு கிரிக்கெட் அணி தயார் செய்கிறேன், நம்ம கம்பெனி பெயரில் விளையாட இருக்கிறது, உங்களுக்கு தெரிந்த சிறந்த ஆட்டக்காரர்கள் பெயர் சொல்லுங்க” என்றார்.

உடனே சந்தோசம் தாங்க முடியவில்லை, கோபால் எப்படியோ கம்பெனி பெயரில் விளையாட அனுமதி வாங்கிட்டார், இனிமேல் பல போட்டிகளில் கம்பெனி விளையாட உதவும் என்று நினைத்து, என் பெயர், டிக்சன், ரவி, நயீம், லசாந்தா (இலங்கை வீரர்), போன்ற சிறந்த வீரர்கள் பெயரை கொடுத்தேன்.

ஒரு வாரத்தில் மீண்டும் கோபால் பேசும் போது நம்ம கம்பெனி கால்பந்து போன்று கிரிக்கெட் போட்டிகள் நடத்த இருக்கிறது, அதற்கு ஒவ்வொரு டிபார்ட்மெண்ட், மற்றும் புராஜெக்ட்கள் தனித்தனியாக அணி தயார் செய்யவேண்டும் என்றார்.

அப்படி பார்த்தால் நான் கோபால் அணியில் விளையாட முடியாது, எங்க புராஜெக்ட் தனி, எனவே நான், டிக்சன், ரவி, அருண், பாரதி, ஜமீல், அஸ்லாம், ஷாவூத், ரஞ்சித், சுவாமிநாதன், மாலிக், டென்சன், லோகநாதன், கங்கா, கிரிஷ் லாட் போன்ற சிறந்த வீரர்களை கொண்ட அணி தயார் செய்தேன், எங்க புராஜெக்ட் மேனேஜர் நபில் நாடிக்கு கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாது, இருந்தாலும் எங்க அணி மேஜேனராக போட்டேன், காரணம் கிரிக்கெட் தெரியாததால் போட்டியின் போது அமைதியாக இருப்பார், இல்லை என்றால் எங்களை குற்றம் குறை சொன்னால் அது ஆட்டத்தை பாதிக்கும். அணியின் கேப்டனாக எனது நண்பர் டிக்சனை தேர்வு செய்தோம், துணை கேப்டனாக என் பெயரை போட்டுக் கொண்டேன்.

டிக்சன் பெங்களூரை சேர்ந்தவர், அருமையான ஆட்டக்காரர், பேட்டிங், பவுலிங், கீப்பீங்க் என்று அனைத்து துறையிலும் சிறந்தவர், மேலும் ரொம்பவும் பொறுமைச்சாலி, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், அரபி என்று பல்மொழி வல்லுநர், அணியை திறமையாக நடத்துபவர்.

எங்க அணியில் வேகப்பந்து வீச நான், அஸ்லாம், அருண், ரஞ்சித், கங்காவும், ஸ்பின் போட லாடும், பேட்டிங் என்று டிக்சன், ரவி, பாரதி, சுவாமி, மாலிக், ஜமில் இருந்தார்கள்.

அணியை ரிஜிஸ்டர் செய்ய கடைசி நாளும் குறித்து கொடுத்தார்கள், நான் ஆரம்பம் முதல் கண்டிப்பாக கோப்பையை கொண்டு வருவேன் என்று எங்க மேனேஜரிடம் சொல்லி வந்தேன், அவருக்கோ நம்பிக்கை இல்லை, மேலும் அவருக்கு பல வேலைகள், கடைசியில் அவர் எங்க அணியை ரிஜிஸ்டர் செய்ய மறந்துட்டார். தலைமை அலுவலகத்தில் எனது அணியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும், மிகச் சிறந்த அணியில் எங்கள் பெயர் இரண்டாவதாக இருந்தது, கடைசியில் எங்க அணி ரிஜிஸ்டர் செய்யபடவில்லை, எங்க புராஜெக்ட் மாதிரியே வேற ஒரு புராஜெக்ட் பெயர் உண்டு, அவர்கள் ரிஜிஸ்டர் செய்ய, போட்டியை நடத்தும் பாலா, பிரான்ஸில், இம்ரான் ஆகியோர் மற்ற அணியை என் அணி என்று நினைத்து, மொத்தம் 32 அணிகளை தேர்வு செய்து (9 அணிகளை தவிர்த்து), யார் யாருடன் மோதுவார்கள் என்பதையும் பட்டியலிட்டு அனைத்து அணிக்கும் இமெயில் செய்து விட்டார்கள்.

நான் எப்போழுதும் இல்லாமல் அன்று தலைமை அலுவலகம் சென்றேன், சிறிது நேரத்தில் டிக்சன் போன் செய்து, “சுரேஷ் நீங்க என்ன செய்றீங்க, நம்ம அணி லிஸ்டிலேயே இல்லை, இங்கே எல்லோரும் மண்டை காய்ந்து போயிருக்காங்க” என்று சொல்லி போனை கடுப்பாக துண்டித்து செய்து விட்டார்.

நான் உடனே தலை தெறிக்க பாலாவின் அலுவலகத்திற்கு சென்றேன், அவர் பிரான்ஸில் அலுவலகத்தில் இருந்தார், இருவரிடமும் என் அணியை இன்னமும் சேர்க்கவில்லையா என்று கேட்டேன், அவர்களோ! மிகவும் ஆச்சரியப்பட்டு, மற்ற அணியை காட்டி இது தானே உன் அணி என்றார்கள். அய்யோ சாமிகளா! அது என் அணி இல்லை, வேற அணி, ஏன் என் அணியை சேர்க்கவில்லை என்றால், அவர்களோ அப்போ உன் அணியின் விபரம் எங்களுக்கு வந்திருக்காது என்றார்கள். உடனே என் மேனேஜர் நபிலை தொடர்பு கொண்டு கேட்டால் அவரோ அப்படியா, தெரியலையே என்று சொல்லி பிரான்ஸிடம் பேசினார், பேசினார் பேசினார், மொபைல் பேட்டரி சார்ஜ் குறையும் வரை பேசினார். எங்க மேனேஜர் நபிலுக்கு ரொம்ப நல்ல பெயருண்டு, இளம்வயதுகாரர், அனைவரிடமும் நன்றாக பழகுவார்.

ஒருவழியாக பிரான்ஸிலை சரிகட்ட, பிரான்ஸில் இருக்கும் 32 அணியில் ஒரு அணிக்கு ஆப்பு வைத்து தான் உன் அணியை உள்ளே நுழைக்கமுடியும் என்று சொல்லி, ஒரு அணியை தூக்கிவிட்டு எங்க அணிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

அடுத்த நாள் யார் யாருடன் மோதுவார்கள் என்ற பட்டியல் தயார் செய்ய, எங்க அதிஷ்டம் முதல் போட்டியே எங்க போட்டியாக அமைந்தது, அது மிகவும் நல்லவாய்ப்பு, ஏனென்றால் போட்டி ஆரம்பிக்க பெரிய பெரிய ஆட்கள் வருவார்கள், அவர்கள் எங்க போட்டியை காண வாய்ப்பு உண்டு, நாமும் ஏதாவது சாதித்து நல்ல பெயர் எடுக்க வாய்ப்புண்டு என்ற எண்ணம்.

மொத்தம் 32 அணியில் மிகச் சிறந்த அணியாக இருந்தவற்றில் எங்க அணி, வாகனப்பிரிவு (Equipment Division) அணி (8பேர் இலங்கை ஆட்டக்காரர்கள்), மனிதவள மேம்பாட்டு பிரிவு (HRD), தலைமை அலுவலகம், எங்களுடன் அடிக்கடி விளையாடும் இரு அணிகளும் இருந்தன. மேலும் எங்களுக்கு தெரியாத நிலையில் பல நல்ல அணிகள்.

போட்டிகள் குவைத் ஆயில் கம்பெனியின் கிரிக்கெட் மைதானத்தின் அருகில் இருந்த ஹாக்கி மைதானத்தில் இரவில் தொடங்கியது, முதல் நாள் மொத்தம் 32 அணியினரும், மற்றும் அனைத்து மேனேஜர்கள், பார்வையாளர்கள் என மொத்த மைதானமே நிரம்பி வழிந்தது, முதன்முறையாக நான் கிரிக்கெட் ஆடுவதை பார்க்க என் மனைவியும் என் மகள் சக்தியும் வந்திருந்தார்கள். சரியான குளிர் வேற.

முதல் போட்டி எங்களுக்கும் அஹமதி மருத்துவமனை பிரிவுக்கும் (Ahmadi KOC Hostpial Maintenance Project) இடையே நடந்தது, அனைவரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லிவிட்டார்கள், இருந்தாலும் 12 ஓவர்கள் மட்டுமே கொண்ட போட்டி, மேலும் மைதானம் சிறியது, இரவில் நடக்குது, வெள்ளை நிறப்பந்து, ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் நன்றாக ஆடினாலும் ஆட்டம் கைவிட்டு போயிடும் என்ற பயம் உண்டு. நாங்களும் எதிரணியை மட்டமாக நினைக்கவில்லை. போட்டியில் டாஸ் வென்று எதிரணி பேட்டிங்க் செய்தது, முதல் ஓவர் முதல் பந்தை அஸ்லாம் போட்டார், அது கேட்சாக அமைந்து எங்களுக்கு விக்கெட் கிடைத்தது, அனைவரும் மகிழ்ச்சியில் முங்கி விட்டோம். அடுத்த ஓவரில் எனக்கு ஒரு விக்கெட், இப்படியாக மாறி மாறி 11 ஓவரில் எதிரணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 62 ரன்கள் எடுத்தார்கள்.

எங்க அணியில் டிக்சன் நன்றாக விளையாடி 5 ஓவரில் 63 ரன்கள் அடித்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு போனோம். இது மாதிரி மற்ற அணிகளும் விளையாடி 32 அணியில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதற்கிடையில் மழை பெய்து போட்டிகளை தாமப்படுத்தியது, அதனால் எங்க கேப்டன் டிக்சன் தன்னுடைய விடுமுறை தள்ளிபோட முடியாமல் இந்தியா செல்ல வேண்டியதாகி விட்டது, அது மாதிரி பாரதிக்கு ஆண் குழந்தை பிறக்க அவரும் இந்தியா சென்று விட்டார், கேப்டன் மற்றும் சிறந்த மட்டையாளரை இழந்த நிலையில் எங்க அணி. இப்போ நான் தான் அணியை நடத்திச் செல்ல வேண்டும், போட்டியின் ஆரம்பித்திலேயே நான் டிக்சனிடம், “டிக்சன், நீங்க அடிபட்டு போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுங்க, நான் கேப்டனாகி விடுகிறேன், பெரிய அங்கிகாரம் எனக்கு கிடைக்கும்” என்று கிண்டலாக சொன்னது உண்மையிலேயே நடந்து விட்டது.

அடுத்த சுற்று போட்டிக்கு எங்க எதிரணி சுபையா பவர் ஸ்டேஷன் புராஜெக்ட் (Subiya Power Station Maintenance Project) என்ற அணி, அந்த அணிக்கு எங்க அணியில் டிக்சன் இல்லை, பாரதி இல்லை என்ற செய்தியை பரப்பி, அவர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்கள். நானோ எனது அணியினரோ அதை பெரிதாக நினைக்கவில்லை, எங்களால் சாதிக்க முடியும் என்று நம்பினோம், முதல் போட்டியில் விளையாடாத ரஞ்சித், கங்கா ஆகியோர் வாய்ப்பு பெற்றார்கள்.

எங்க எதிரணி ஏற்கனவே முதல் போட்டியில் 12 ஓவரில் 148 ரன்கள் குவித்த அணி, இருந்தாலும் எங்க அணியில் அஸ்லாம் மற்றும் என் பந்தை அடிப்பது அத்தனை எளிதில்லை, மூன்றாவது மற்றும் நான்காவது பந்து வீச்சாளராக அருண், கங்கா, ரஞ்சித் வருவார்கள், அவர்கள் நன்றாக வீசினால் நாங்க எளிதாக வெல்ல முடியும் என்று நம்பினோம். நான் டாஸ் தோற்றுவிட்டேன், இருந்தாலும் எங்க அணியிடம் நான் தான் டாஸ் வென்றேன், பந்து வீச்சுக்கு பதில் பேட்டிங்க் தேர்வு செய்தேன் என்று பொய் சொல்லி உள்ளே அழைத்து சென்றேன், இல்லை என்றால் ஒரிரு ஆட்டக்காரர்கள் டாஸ் தோத்துட்டோமா என்று புலம்பக்கூடும். நானும், டிக்சனும் எப்போவும் டாஸ் வென்றாலும், தோற்றாலும் அதை வெளியே சொல்லாமல், நாங்க வென்றது போலவே நடந்துக் கொள்வோம். போட்டி முடிந்த பின்னர் தான் அதை அறிவிப்போம். இது ஒருவகையில் பலனளிக்கும் விசயம். எங்களைப் பொறுத்தவரை நாங்க பேட்டிங்க் செய்தால் 10 ரன் ஒரு ஓவருக்கு, எதிரணி பேட்டிங்க் செய்தால் 5 ரன் ஒரு ஓவருக்கு என்று கணக்கு வைத்துக் கொள்வோம்.

முதலில் நாங்க பேட்டிங்க் செய்ய ரன்களுடன் விக்கெட்களும் விழுந்து கொண்டே இருந்தது, நானும் அனைத்து ஆட்டக்காரர்களும் வாய்ப்பு பெறச் செய்ய பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி அனுப்பினேன், காரணம் இனி வரும் போட்டியில் கடைசி ஆட்டக்காரர் வரை விளையாட வேண்டிய சூழ்நிலை வரும், போது இவர்கள் நன்றாக ஆட இது ஒரு பயிற்சியாக இருக்கும். அப்படி சென்றவர்கள் ஒரு சிக்ஸரோ, ஒரு பவுண்டரியோ அடித்து விட்டு ஆட்டமிழக்க, நான் சென்ற வேகத்தில் வர, கடையில் 10 ஓவரில் 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தோம், அந்நிலையில் அருண் சென்று கடைசி இரு ஓவரில் 40 ரன்களுக்கு மேல் விளாச நாங்க 12 ஓவரில் 146 ரன்கள் எடுத்தோம். எதிரணியினரை நான், அஸ்லாம், அருண், கங்கா, ரஞ்சித் எல்லோரும் சேர்ந்து புரட்டி எடுக்க 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

காலிறுதியில் நாங்க இருமுறை வென்ற அணியான சுலைபியா வேஸ்ட் வாட்டர் டிரீட்மெண்ட் புராஜெக்ட் (Sulaibiya Waste Water Treatment Project) அணியுடன் மோதினோம், அதிலும் டாஸ் வென்று முதலில் பேட் செய்து 138 ரன்கள் எடுத்தோம், எதிரணியை 73 ரன்களுக்குள் அவுட் செய்தோம். ஒருவழியாக அரையிறுதிக்கு சென்றாச்சு, காலிறுதியில் மிகபெரிய அணிகளான வாகனப்பிரிவு (Equipment Division) அணி (8பேர் இலங்கை ஆட்டக்காரர்கள்), மனிதவள மேம்பாட்டு பிரிவு (HRD), தலைமை அலுவலகம், தோற்று வெளியேறி விட்டன. கடைசி நான்கு அணிகளில் எங்க அணி, பெட்ரோபேக் (KOC Petrofac Maintenance Project) என்ற அணி, பம்பிங் ஸ்டேசன் அணி (Operation and Maintenance of Pumping and lifting Stations Project), அப்புறம் எங்களுடன் அடிக்கடி விளையாடும் நண்பர் அணி (KOC Effluent Water Disposal Plants Project).

செமி பைனலில் நாங்க பம்பிங் ஸ்டேசன் அணியுடன் மோதினோம், காலையில் இருந்தே பயங்கர டென்சன், செமி வரை வந்தாச்சு, இப்போட்டியில் வென்றால் கண்டிப்பாக கோப்பை உண்டு, இறுதிபோட்டியில் விளையாடுவது என்பது மிகவும் சந்தோசமான ஒன்று. டிக்சன், பாரதி இல்லை, எனக்கு கால்மூட்டு சரியான வலி, ஜமிலுக்கு கழுத்து சுளுக்கு பிடித்துக் கொண்டது, அஸ்லாமுக்கு காலில் அடி, அதிரடி வீரர் ரவியின் மனைவிக்கு விசா முடிந்து இரண்டு நாளில் இந்தியா போகிறார் என்ற கவலை, கிரிஷ் லாட் ஊருக்கு போகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார். இப்படி பல பிரச்சனைகள்.

வழக்கம் போல் மைதானத்தில் அனைவரும் கூடி, வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று சபதம் எடுத்து உள்ளே சென்றோம், டாஸ் வென்ற எதிரணி முதலில் பேட் செய்தது, நானும் டாஸ் தோற்றதாக காட்டிக் கொள்ளாமல் பந்து வீசினோம், முதல் 10 ஓவரில் எதிரணி 65 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள், அடுத்த வீசிய கங்கா, அருண், ரஞ்சித் ஓவர்களில் சரியாக அடித்து 120 ரன்களாக உயர்த்திக் கொண்டார்கள். 120 ரன்கள் என்பது 15 ஓவரில் பெரிய ரன்களே கிடையாது, ஆனாலும் எதிரணியில் நல்ல பந்து வீச்சாளர் இருந்தார்கள் என்பதால் கூடுதல் டென்சன். ஒருவழியாக கடைசி ஓவர் கடைசி பந்தில் அஸ்லாம் பவுண்டரி அடிக்க நாங்க வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றோம். தோற்ற அணியின் கேப்டன் ஜெயக்குமாருக்கு ஓடி போய் ஆறுதல் சொன்னேன்.

மற்றொரு அரையிறுதியில் எனது நண்பர்கள் அணி (எப்யூலண்ட் வாட்டர் இன்ஜக்சன் புராஜெக்ட்) மற்றொரு அணியான பெட்ரோபேக் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த எனது நண்பர்கள் அணி 15 ஓவரில் 146 ரன்கள் குவித்தார்கள், பாவம் எதிரணி 90 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 32 அணிகள் மோதிய போட்டித் தொடரில் எங்க இருவரது அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் சம அளவில் திறமை பெற்றது, இருந்தாலும் எதிரணிக்கு 4 நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள், எங்க அணியில் நானும் அஸ்லாம் மட்டுமே, முதன் முறையாக டிக்சன் இல்லை என்பதை நான் மனதளவில் உணர்ந்தேன், இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் போட்டிக்கு தயார் ஆனோம், அதே நேரத்தில் எங்க அணியில் நல்ல மட்டையாளரான கிரிஷ் லாட் கட்டாயம் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை, இப்போ மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் இறுதிப் போட்டிக்கு விளையாட வேண்டிய சூழ்நிலை, எனக்கும் அஸ்லாமுக்கும் காலில் வலி வேற.

நான் என் வீரர்களிடம் நம்மால் கண்டிப்பாக வெல்ல முடியும், நம்பிக்கை வைத்திருங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். முதலில் டாஸ் வென்ற நான் பேட்டிங்க் தேர்வு செய்தேன், 120 ரன்கள் எடுத்தாலே போதும், நாம் வென்று விடலாம் என்று சொல்லியிருந்தேன், ஆனால் எதிரணியின் அற்புதமான பந்து வீச்சால் 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நானும் அருணும் எவ்வளவு முயற்சித்தும் அதிக ரன்கள் எடுக்கமுடியவில்லை.

எதிரணி பேட்டிங்க் செய்யும் போது என்னுடைய பந்தையும், அஸ்லாம் பந்தையும் அடிக்க வேண்டாம் என்றும், அடுத்து வரும் அருண், கங்கா, ரஞ்சித் பந்தை அடிக்கலாம் என்று முடிவு செய்து ஆடினார்கள். அது மாதிரியே நாங்க இருவரும் போது 5 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அடுத்த வந்தவர்களை அடித்து ஆடி ரன்கள் சேமிக்கத் தொடங்கினார்கள், அப்போ அப்போ விக்கெட்களும் கிடைத்தது, கடைசி 6 ஓவரில் 36 ரன்கள் தேவை, அந்நிலையில் ரஞ்சித் கிடைத்த அருமையான கேட்சை விட்டு விட்டார், அடுத்து கங்கா தொடர்ந்து 3 வைட் பந்து வீச (1 வைட் = 2 ரன்), போட்டி எங்க கையை விட்டு போனது, ஆனாலும் நானும் அஸ்லாமும் விடாமல் போராடி வீச, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது, ரஞ்சித் பந்து வீச வந்தார், முதல் பந்தில் 4 ரன்கள் எடுத்து விட்டார்கள், அடுத்த இரு பந்தில் 1 ரன், ஒரு விக்கெட், இப்போ 3 பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் ஒரு ரன்னும், கடைசி 2 பந்தில் ஒரு ரன், அப்போ ரஞ்சித் அருமையாக போல்ட் செய்தார் இப்போ கடைசி பந்து ஒரு ரன் தேவை. ஒரு ரன் எடுத்தால் எதிரணி வெற்றி, விக்கெட் விழுந்தால் நாங்க வெற்றி, ரன் எடுக்கவில்லை என்றால் கோப்பை இரு அணிக்கும் கிடைக்கும், இந்நிலையில் எதிரணி ஆட்டக்காரர் பந்தை அடிக்க அது எங்களது மிகச் சிறந்த பீல்டரான ஜமீலில் விரலில் பட்டு எகிற அதற்குள் ஒரு ரன் ஓடி வென்று விட்டார்கள். திறமை, நம்பிக்கை இருந்தும் அதிஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மைதானத்தில் ஒரே குழப்பம், கொண்டாட்டம், நாங்க அனைவரும் ஒன்று கூடினோம், நான் அனைவரையும் பார்த்து “நாம் இறுதி போட்டியில் எளிதாக தோற்கவில்லை, போராடி தான் தோற்றோம், போராடி தோற்றதில் கூட சந்தோசம் தான் கிடைக்கும், 32 அணியில் நாம் இரண்டாம் இடம் பெற்றது மிகப் பெரிய சாதனை, அதிலும் டிக்சன், பாரதி, லாட் இல்லாமல் நாம் விளையாடி இரண்டாவது வெற்றிக் கோப்பை எடுத்திருக்கிறோம், இதற்கு முக்கிய காரணம் அருண், கங்கா, ரஞ்சித் ஆகியோர் தான், ஆக யாரால் தோற்றோம் என்று இனிமேல் பேசவேண்டாம். மகிழ்ச்சியாக இருப்போம், அடுத்த ஆண்டு நாம் தாம் வெற்றி பெறுவோம்” என்று கூறினேன்.

மைதானத்தில் வந்த அனைவரும் வென்றவர்களை விட்டு விட்டு எங்களையே அதிகம் பாராட்டினார்கள். எதிரணியின் திறமைக்கு நாங்க சரியான சவால் கொடுத்தோம், எளிதாக வெல்வார்கள் என்று நினைத்த அணியை கலங்க வைத்துவிட்டீர்கள், என்று எங்க மேனேஜர் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். அதன் பின்னரே எங்க அணியில் அனைவரும் சந்தோசமடைந்தார்கள்.

ஒருவழியாக இரண்டாவது வெற்றிக் கோப்பையையும், பதக்கத்தையும், பல போட்டிகளில் நடுவராகவும் நான் பணி புரிந்தமைக்கு ஒரு பரிசும் கிடைத்தது, ஆக எங்க கம்பெனியில் முதன் முறையாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது, அதிலும் இறுதிப்போட்டி பல ஆண்டுகளுக்கு அனைவரின் மனதிலும் நினைவில் இருக்கும், எனக்கோ சாகும் வரை மறக்கமுடியாத சாதனைப் போட்டி. இப்போட்டியில் மறக்கமுடியாத சம்பவங்கள் பல, எங்க அணிக்காக விளையாட இருந்து பின்னர் வேறு வழியில்லாமல் HRD அணிக்கு விளையாட எனது இலங்கை நண்பர் லாசந்தா எடுத்த 108 ரன்கள் (48 பந்தில்), காலிறுதியில் அருண் அடித்த கடைசி இரு ஓவர்கள், எனது நண்பர்கள் அணி, தோற்க வேண்டிய காலிறுதி போட்டியில் எதிரணியின் முட்டாள்தனமான முடிவில் வென்றது, என் மனைவி முதன்முறையாக என் ஆட்டத்தை கண்டு, உங்களால் இத்தனை வேகமாக ஓட முடியுமா என்று ஆச்சரியமாக கேட்டது (24மணி நேரமும் கணினி முன்னால் உட்கார்ந்து இருப்பதால் சோம்பேறி என்று நினைத்து விட்டாராம்), எங்களுக்கு கோப்பை வழங்கிய எங்க கம்பெனியின் முதலாளிக்கு நாங்க வேறு போட்டியில் வென்ற கோப்பையை பரிசாக கொடுத்தது.

இந்தியா செல்லும் போது கோப்பையை எடுத்துச் சென்று என் அன்னையிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது என் எண்ணம். என் அன்னையும் அதனை அனைவருக்கும் காட்டி பெரு மகிழ்ச்சி அடைவார்.