Thursday, January 26, 2006

நினைவலைகள் - களவும் கற்று மற

அப்பா இல்லாத காரணத்தால் சின்ன வயதில், என் அம்மா என்னையும் என் தம்பியையும் வளர்க்க ரொம்ப ரொம்பவே கஷ்டப்பட்டாங்க, குறிப்பாக எங்க உறவினர்கள் முன்னாள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும், யாரும் எங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்லக்கூடாது என்பதே என் அம்மாவின் ஆசை.

நானோ நினைத்ததை சாதிக்க துடிக்கும் பயங்கரமான கோபக்கார முரட்டு புத்திச்சாலி, என் தம்பியோ அன்பான அப்பாவி நோயாளி.

நாங்கள் இருவரும், பொய், திருட்டு, கெட்டு பேச்சுகள், கெட்ட செயல்கள் செய்வதை தடுக்க அம்மா தினமும் அறிவுரைகள், கதைகள் சொல்வார்கள், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், பெரிய பெரிய தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை தினமும் இரவில் சொல்வார்கள்.

நானும் என் தம்பியும் கூடுமானவரை அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றியிருக்கிறோம். எங்க தெருவில் மற்ற பையன்கள் வாயிலில் செந்தமிழாய் கெட்ட வார்த்தைகள் வரும், அண்ணன், தம்பியை பார்த்து அவன் பரம்பரையே திட்டுவான். பெத்த அம்மா தன் மகனை நாசமாய் போ என்று திட்டுவதும் உண்டு, சிலரின் திட்டுதல் நன்மையில் கூட முடியும் (எ.கா. கொல்லையில் போ, பேதியில் போ, மருந்து மாத்திரை செலவே இல்லை).

அந்த தாயை அழைத்து என் அம்மா அறிவுரை சொல்வார்கள். என் மற்றும் தம்பியின் வாயிலிருந்து ஒரு கெட்ட வார்த்தை தூக்கத்தில் கூட வராது. சில சமயம் அர்த்தம் தெரியாமல் யாராவது திட்டினாலும் என் அம்மா அந்த பையனை அழைத்து, அவன் திட்டியதற்கு அர்த்தம் சொல்வார்கள், “இப்போ சொல்லு, நீ உன் தம்பியை திட்டினாயா, அல்லது உன் அம்மாவை திட்டினாயா” .

மாலையில் 6 மணிக்கு மேல் வீட்டு வாசலை தாண்டி வெளியே செல்ல அனுமதி கிடையாது. பள்ளி விட்டு வந்ததும் வெளியே சென்று விளையாட அனுமதி, அதுவும் 6 மணி வரை தான், பல நாட்கள் மாலை 6 மணி கடந்ததை அம்மா கையில் இருக்கும் கொய்யா குச்சி தான் சொல்லும்.

தம்பி அதிஷ்டக்காரன், அதிகம் விளையாட செல்ல மாட்டான், வயதான பாட்டிகள் மத்தியில் ஊர்க்கதை பேசுவதில் வல்லவன்,யார் யார் கூட ஓடிப் போனார்கள்,போன்று அனைத்து கதைகளும் பேசுவான் . எனக்கோ ஒரு இடத்தில் அமர்ந்து பேசவே பிடிக்காது.

என்னுடைய நண்பர்களுடன் விளையாடும் போது நேற்றிரவு அந்த தெருவில் நடந்த அம்மன் விழாவில் ரஜினி படம் போட்டார்கள், போய் பார்த்தோம், மேலத் தெரு கல்யாண வீட்டில் வீடியோ போட்டார்கள் என்று எல்லாம் பேசுவதைக் கண்டு நாம மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் மனம் வருந்தியிருக்கிறேன்.

அம்மா, நம்மை என்று சுதந்திரப்பறவையாக விடுவாங்க என்று பல நாட்கள் கனவு கண்டதுண்டு. தினம் தினம் அறிவுரை, கதைகள், அர்ச்சனைகள், போதனைகள் கிடைக்கும்.

சின்ன வயதில் கடவுள் பக்தி என்பதை விட பயமே அதிகம். தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்திடுவார், கை, கால் ஊனமாகி விடும், படிப்பு வராது, காய்ச்சல் வந்துடும், பேய் பிடித்திடும் இப்படி எல்லாம் எனக்குள் நானே பயந்திருக்கிறேன், அதுவே என்னை ஒழுக்கமானவனாக நடக்க வைத்தது.

பள்ளியில் பல்பம், பென்சில் கீழே கிடந்தால் யாராவது பார்க்கிறார்களா என்று ஒரு சுற்று பார்த்து விட்டு எடுத்து விடுவேன், அவ்வளவு தான் இதயத் துடிப்பு 100 மீட்டர் ஓடி வந்தவன் போல் அடிக்கும்.

பின்னர் எனக்கு தெரிந்த அத்தனை கடவுள்களும் கண் முன்னால் ஆயுதங்களோடு வந்து போவார்கள், உடனே ஓடி போய் ஆசிரியரிடம் இது கீழே கிடந்தது என்று கொடுக்க, அவரோ எல்லோரையும் கை தட்டச் சொல்லி, நேற்று பென்சில் திருடியவன் காதை இன்றும் திருகி, இருந்தால் இவனைப் போல் இருக்க வேண்டும் என்று சொல்ல சொல்ல, எனக்கு புகழ் போதை ஏறியது, அதுவே பிற்காலத்தில் என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள தூண்டியது.

அப்படியே எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு போனால் அம்மா என்னை ஒரு வழி செய்து விடுவாங்க. எனவே பயத்தாலும், புகழாலும் நான் தவறு செய்யாமல் இருந்தேன். சில நேரங்களில் அம்மா, கடைக்கு போயிட்டு வா என்று பைசா கொடுத்து அனுப்புவாங்க, நானும் கடையில் பொருட்கள் வாங்கி வருவேன், அப்போ எப்படியும் 10 முதல் 20 பைசா வரை கமிஷன் அடித்து விடுவேன்.

அப்போ எல்லாம் பபுள்கம் வாங்க ஆசைப்படுவேன், அதில் ஒரு ஸ்டிக்கர் கொடுப்பார்கள், அதில் கிரிக்கெட் வீரர்களின் பெயரும், ரன், விக்கெட் இருக்கும், அதை சேகரித்தேன். வீட்டில் வந்ததும் அம்மா, கொடுத்த பணத்திற்கும் வாங்கி வந்த பொருளுக்கும் கணக்கு கேட்பார்கள்.

நான் வரும் போது உருளைக்கிழங்கில் 5 பைசா, கேரட்டில் 10 பைசா ஏற்றி விலையை நிர்ணயம் செய்து மனப்பாடம் செய்து வந்து சொல்வேன். நான் சொல்லும் திருட்டு கணக்கை அம்மாவும் கேட்டு விட்டு போ, போய் படி என்று அனுப்பி விடுவார்கள்.

ஒரு மணி நேரம் கழித்தப் பின்பு மீண்டும் கணக்கு கேட்க உருளைக்கிழங்கில் ஏற்றிய பைசாவை தக்காளியில் மாற்றி சொல்ல, மீண்டும் கொய்யா குச்சி என் கணக்கு தப்பு என்று சொல்லும்.

கொஞ்ச காலத்தில் கமிஷன் எடுப்பது என் பிறப்புரிமையாக்கப்பட்டது. கடைக்கு போக வேண்டிய நேரம் வந்ததும் படிப்பதாக புத்தகத்தை எடுப்பது அல்லது கழிவறையில் போய் ஒளிந்துக் கொள்வேன்.

அம்மாவும் எனக்கு வீட்டில் பொறுப்பு இருப்பதாக எண்ணி கணக்கு கேட்பது கிடையாது. என் அம்மா வீட்டில் பணத்தை எடுக்க, வைக்க எங்களையே உபயோகிப்பார்கள். பணத்தை ஒரு நாளும் பெட்டியில் வைத்து பூட்டியது கிடையாது. அஞ்சறைப் பெட்டி, ஊசி நூல் பெட்டி, தையல் மிஷின் பெட்டி, சாமி அறையில் விபூதி பெட்டி இப்படி திறந்த வெளியில் தான் இருக்கும்.

தையல் தைத்து கிடைத்த பணம், எலுமிச்சை, கருப்பட்டி விற்ற பணத்தை நான் அல்லது தம்பி தான் கணக்கு போட்டு வாங்கி, எங்கே அம்மா சொல்லுறாங்களோ அங்கே வைப்போம்.

ஒரு நாளும் அந்த பைசாவை எடுக்க தோணியது இல்லை, ஆனால் கடைக்கு போனால் மட்டும் கமிஷன் அடிக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும். சில சமயம் அம்மா பணத்தை எங்கே வைத்து, எப்போவே தேடி, அது கிடைக்காமல், ஒருவேளை நான் தான் எடுத்துவிட்டேன் என்று தவறாக நினைத்து துவைத்து எடுத்த நாட்கள் உண்டு.

அது என்னமோ என்ன மாயமோ தெரியாது, என் தம்பிக்கு அடியே விழாது, நான் வேறு பணத்தை எடுத்தேன், இல்லை என்று சொல்வதற்கு பதில் சிரித்துக் கொண்டிருப்பேனா, அதுவே அம்மாவை நல்லா கடுப்பேற்றி விடும்.

அப்புறம் தவறாக அடித்ததை நினைத்து அம்மா மனம் வருந்துவாங்க, அது தான் சாக்கு என்று சொல்லி, முருக்கு, அதிரசம் செய்யச் சொல்லி ஆர்டர் போடுவேன்.

சில நேரங்களில் காய்கறி, மளிகைக்கடையில் பணத்தை கொடுத்து பொருள் வாங்கி வரும் போது, கடைக்காரர் ஏதாவது ஒன்றை விட்டோ, அல்லது ஏதோ நினைவில் பணத்தை அதிகமாக கொடுத்து விடுவார். அய்யோ, அந்த பணத்தை வாங்கி நான் படும் பாடு இருக்கிறதே, கடன் கொடுத்து வாங்க முடியாமல் இருக்கும் ஒருவனின் மனநிலை தான். பக், பக் என்று அடிக்கும், எங்கே அந்த பைசாவை அமுக்கி விடலாமா, அல்லது கடைக்காரரிடம் திரும்பி கொடுத்து விடலாமா? மாலையில் கிரிக்கெட் பந்து வாங்க வேறு பைசா கொடுக்க வேண்டுமே,இதை அதற்கு உபயோகிக்கலாமா, பபுள்கம் வாங்கலாமா என்று எல்லாம் மனசு நினைக்கும், ஒரு 100 மீட்டர் நடந்ததும், மீண்டும் அனைத்து கடவுள்களும் கண் முன்னால் வந்து மிரட்டுவார்கள், ஊரில் கெட்ட பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வந்து எங்க அணியில் சேர் என்பார்கள்.

அய்யோ கடவுளே என்னை காப்பாற்று என்று கூறிக் கொண்டு, நல்ல பிள்ளையாக, “அண்ணாச்சி, பைசா ஜாஸ்தியாக கொடுத்துட்டீங்க, கொஞ்சம் கணக்கு பாருங்க” என்று சொல்லி, குற்றத்திலிருந்து தப்பி விடுவேன்.

அவ்வளவு தான் அந்த கடைக்காரர் என் சித்தப்பா, மாமா அனைவரிடமும் என் நன்னடத்தைக்கு சான்றிதழ் கொடுப்பார், அதன் பிரதி என் அம்மாவுக்கு வரும், அப்போ என் தாயாரின் மகிழ்ச்சியை கண்டால் அதன் பின்பு கனவிலும் தவறு செய்யவே தோணாது. இத்தனை இருந்தும், நான் கள்ள கழவாணிப்பயலாக இருந்த கதையை சொல்கிறேன்.

(நினைவலைகள் ஓய்வதில்லை)