Wednesday, May 31, 2006

நம்பிக்கை போட்டி - இன்றே கடைசி நாள்

இணையத்தின் இனிய நண்பர்களே!

வணக்கம்!


உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006.

விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!

உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.

Sunday, May 28, 2006

டென்னிஸ் - பிரெஞ்ச் ஓப்பன்

இன்று பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியாச்சு.

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் நான்கு போட்டிகளில் ஒன்று பிரெஞ்ச் ஓப்பன் போட்டி, நான்கில் கடுமையான போட்டி பிரெஞ்ச் ஓப்பன் தான். களிமண் தரையில் ஆடப்படுவதால் ஆட்டம் மிகவும் வேகம் குறைவாக இருக்கும், மணிக்கணக்கில் ஆட்டம் நீடிக்கும். சின்ன வயசில் மாட்ஸ் விலாண்டர் ஆட்டம் ஆடத் தொடங்கினால், நாங்க ஓட்டம் எடுப்ப்போம், அப்படி பொறுமையாக ஆடுவாங்க, மணிக்கணக்கில், நாள் கணக்கில் ஆடுவாங்க.

விம்பிள்டன் எனப்படும் புல்தரை போட்டியில் கலக்கும் பல முன்னணி ஆட்டக்காரர்கள் களிமண் தரையில் தடுக்கி விழுவார்கள், பீட் சாம்பிராஸ் ஒரு எடுத்துக்காட்டு, அந்த வகையில் சிக்காமல் தப்பிய அதிசய ஆட்டக்காரர் ஜான் போர்க் தான். இவர் விம்பிள்டன் 5 முறையும், பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் 6 முறையும் வென்றவர்.

பிரெஞ்ச் ஓப்பன் போட்டி ஆரம்பித்தவுடன் தினம் தினம் நான் முதலில் பார்ப்பது, இன்று எந்த பெரிய தலை கவிழ்ந்தது என்று தான், ஆமாம் அது மாதிரியே நடக்கும், முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்வார்கள், அரையிறுதி ஆட்டக்காரர்கள் பெயரையும் ரேங்கையும் பார்த்தால் நாம் முன்னபின்ன கேள்விப்படாத பெயராகவே இருக்கும். அதில் கொஞ்சம் பேர் மட்டுமே புகழ்பெற்றவராக இருப்பார்கள் ஜிம் கொரியர், இவான் லெண்டில் இப்படி, ஆனால் மகளிர் போட்டியில் அப்படி இருக்காது, முன்னணி வீராங்கனைகள் தான் வெல்வார்கள்.

பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் இளம் வயதில் வென்றவர்கள் என்ற சாதனைப்பட்டியலில் ஆண்கள் பிரிவில் மைக்கேல் சாங் 17 வயதில் ஸ்டீபன் எட்பெர்க்கை வெற்றி கொண்டார். மகளிர் பிரிவில் மோனிகா செலஸ் 1990 16 வயதில் வென்றார்.

அதிக முறை வென்றவர்கள் பட்டியலில் கிரிஸ் எவர்ட் – 7 முறை, அழகான ஆட்டக்காரர், நான் பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலப்பாடத்திட்டத்தில் இவரது வாழ்க்கை வரலாறு இருந்தது. ஆடவரில் ஜான் போர்க் 6 முறை வென்றிருக்கிறார்.



இந்தியர்கள் பிரெஞ்ச் ஓப்பனில் என்று பார்த்தால் மகேஷ் பூபதி ஜப்பானை சேர்ந்த அழகான இளம் வீராங்கனையோடு ஜோடி சேர்ந்து ஆடி வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை 1997ல் வென்றார். பின்னர் லியாண்டருடன் சேர்ந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் 1999 மற்றும் 2001ல் வென்றார்.




சென்ற ஆண்டு வென்றவர்கள் ஆடவர் பிரிவில் ரபெல் நாடல், மகளிர் பிரிவில் ஜஸ்டின் ஹெனான்.

இந்த ஆண்டு ???

வழக்கம் போல் களிமண் ராசா ரபெல் நாடல் வெல்லுவார் என்று எதிர்பார்க்கலாம்.












Wednesday, May 24, 2006

நான் யார்? மதுமிதா மற்றும் அனைவருக்கும்

வலைப்பதிவர் பெயர்: பரஞ்சோதி (எ) சுரேஷ்

வலைப்பூ பெயர் : பரஞ்சோதியின் பக்கம், சிறுவர் பூங்கா, சிறுவர் பாடல்கள், சாதனையாளர்கள், நம்பிக்கை, முத்தமிழ் மன்றம், விரைவில் சக்தி புராணம் மற்றும் சிறுவர் உலகம்.

சுட்டி(url) : http://paransothi.blogspot.com/
http://siruvarpoonga.blogspot.com/
http://siruvarpaadal.blogspot.com/
http://nambikkaioli.blogspot.com/
http://muthamilmantram.blogspot.com/
http://saathanai.blogspot.com/
http://sakthiparansothi.blogspot.com/
http://siruvarulagam.blogspot.com/

ஊர்: பிறந்தது சென்னையில், நடை பயின்றது ஹைதராபாத்தில், பாடம் பயின்றது திருச்செந்தூர் பரமன்குறிச்சியில், வாழ்க்கை நடத்துவது அபூஹலிபா குவைத் நாட்டில், அடுத்தது ?????.

நாடு: தாய் நாடு : இந்தியா, தந்தை நாடு: குவைத்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நம்ம ஜெர்மனி முத்து அவர்கள் தான்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 2004லேயே ஜெர்மனி முத்து தொடங்கி கொடுத்தார், ஆனால் பதிவுகள் தொடங்கியது ஜீன் 2005ல்

இது எத்தனையாவது பதிவு: குத்து மதிப்பாக 100+

இப்பதிவின் சுட்டி(url): http://paransothi.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என்னைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ளவே.

சந்தித்த அனுபவங்கள்: எக்கசக்கம், சொல்ல ஆரம்பித்தால் நிப்பாட்ட முடியாது.

பெற்ற நண்பர்கள்: எக்கசக்கம், சொல்லாமல் விட்டால் நன்றாக இருக்காது, ஜெர்மனி முத்து, மூர்த்தி அண்ணா, சாகரன், முத்துகுமரன், இராகவன் அண்ணா, இசாக், கவிமதி, நண்பன், முருகபூபதி, பாஸிடிவ் ராமா (எங்க ஊர்க்காரர்), சிவா (எங்க சொக்காரர்), விழியன், மஞ்சூர் ராசா, சித்தார்த், பாம்பாட்டி சித்தன், துளசி அக்கா, மனு அம்மா, நிலா சகோதரி, சண்முகி அக்கா, இன்னும் பல தமிழ்மண, தேன்கூடு நண்பர்கள், வலைப்பதிவை தாண்டி எக்கசக்கமான நண்பர்கள், உறவினர்கள். ஆனா பாருங்க, என்னை விட என் மகள் சக்திக்கு தாங்க அதிக நண்பர்கள்.

கற்றவை: அதுவும் எக்கசக்கம், தினம் தினம் கற்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம், ஆனால் பயனுள்ளதாக எழுதலாம் என்ற எண்ணம்.

இனி செய்ய நினைப்பவை: குழந்தை இலக்கியத்திற்காக என் பங்கிற்கு ஏதாவது செய்வது, முடிந்தால் தமிழிலில் முழுவதும் குழந்தைகளுக்கான இணைய தளம், அதற்கூ உதவ நண்பர்களை தேடி வருகிறேன், உதவுவார்கள் என்றும் நம்புகிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்ல ஒன்றும் இல்லை என்று சொல்லலாம், ஆனாலும் சொல்கிறேன். வாழ்க்கையில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நம்புபவன், இல்லை என்றால் எங்கேயே ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக்கா இருக்க வேண்டியவன், உங்க எல்லோருக்கும் அறிமுகம் ஆகி இருப்பேனா என்ன? என் முன்னேற்றத்திற்கு முழு காரணம் என் தாயாரும் என் மனைவியும் தான், இப்போ என் மகளும் கூட.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நண்பர்களே! இறைவன் படைத்த அழகிய உலகில் நாம் வாழும் நாட்கள் கால சக்கரத்தில் ஒரு புள்ளியை விட குறைவே, ஆக இருக்கிற காலத்தில் நல்லதை செய்வோம், நல்லதையே நினைப்போம், நாமும வாழ்வோம், பிறரையும் வாழ வழி செய்வோம்.

Thursday, May 18, 2006

கிரிக்கெட் – பாஹில் கோப்பை புகைப்படங்கள்



இந்த புகைப்படங்கள் மார்ச் மாதம் குவைத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் எடுத்தவை.

குவைத்தில் பாஹில் என்ற இடத்தில் இருக்கும் செம்மானூர் ஜீவல்லரி என்ற புகழ்பெற்ற நகைக்கடை ஸ்பான்ஸர் செய்ய, கேரளாவைச் சேர்ந்த நண்பர்கள் முதன் முறையாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தினார்கள்.

அதில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன, இறுதிப் போட்டியில் எங்க அணி மற்ற அணியிடம் தோல்வி அடைந்தது, மிகச் சிறந்த 3 ஆட்டக்காரர்களால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் அரையிறுதியில் வென்று, இறுதி போட்டியில் கடைசி வரை போராடி பயனில்லாமல் போய் விட்டது. வலிமையான எதிரணியை மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தோம், ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே சிறந்த துவக்க ஆட்டக்காரர் சேவாக் மாதிரி வெளியே போன பந்தை ஒத்தடம் கொடுத்து அவுட் ஆனால், அடுத்தவரோ முதல்வரை விட்டு பிரியாதவர் மாதிரி ஓடி ரன் அவுட் ஆகி வந்து விட்டார், அடுத்த சென்றவர் 5 பந்துகள் தொடர்ந்து அடிக்க முடியாததால் வெறி வந்தவர் மாதிரி அடிக்க, பந்து சரியாக ஸ்டம்பை பதம் பார்த்தது.

அடுத்து சென்றவர்கள் ரன் எடுப்பதை விட விக்கெட் எண்ணிக்கை கூடக்கூடாது என்ற கவனத்தில் ரன் விகிதத்தை உயர்த்தினார்கள். இறுதியில் சென்ற நானும் மட்டையை வேகம் கொண்டு வீச காற்று மட்டுமே அடிபட்டு, பந்து கீப்பர் கைக்கே சென்றது, இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம்.

ஏதோ கடைசி நேரத்தில் போட்டியில் சேர்ந்து, கடைசி நேரத்தில் கிடைத்தவர்களை கொண்டு போய் விளையாடி பைனல் வரை வந்ததும், பெரிய அணிக்கு தண்ணீ காட்டியதும் எங்க எல்லோருக்கும் திருப்தி.

இப்போட்டி முடிந்து அன்று மாலையில் எங்க கம்பெனியின் போட்டியில் கால் இறுதி ஆட வேண்டும், கால் கால் எல்லாம் சரியான வலி, அப்படியோ போய் ஆடி காலிறுதியில் வென்று செமி போனோம், அதன் கதையை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.

ஓவர்கள் எல்லாம் முடிந்து போச்சு, ஆட்டமும் போச்சு, வெற்றி கோப்பையும் போச்சு, அதனாலேயே சிறந்த பந்து வீச்சு, அதிக விக்கெட், அதிக ரன்கள் எடுத்த எங்களவர்களுக்கு மற்ற பரிசு கோப்பைகள் கிடைக்காமல் போய்விட்டது, அதை நினைத்து கொஞ்சம் வருத்தம். எங்க விக்கெட் கீப்பர் பெங்களூரை சேர்ந்த ஜமீல் இறுதி போட்டியில் மட்டுமே 5 கேட்ச், ஒரு ரன் அவுட், ஒரு ஸ்டம்பிங்க் செய்து, மிகச் சிறந்த விக்கெட் கீப்பருக்கான பரிசை தட்டிச் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.



அடுத்த ஆண்டு மிகச் சிறந்த அணியை கொண்டு போய் வெற்றி கோப்பைகள் அள்ளி கொண்டு வர வேண்டும். எங்க அணியில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக தங்கராஜ், ரஞ்சித், ஜமீல், ரிஸ்வான், அருண் ராஜகோபால்.

உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து வலமாக கங்கா, டென்சன், மாலிக், வீரமணி, சுபேர், சந்தீப், நான்.